தஞ்சையில், மாணவிகள் 2 பேருக்கு கொரோனா; கல்லூரியில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு


தஞ்சையில், மாணவிகள் 2 பேருக்கு கொரோனா; கல்லூரியில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2021 4:04 AM GMT (Updated: 8 Jan 2021 4:04 AM GMT)

தஞ்சையில் கல்லூரி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரியில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மேற்கொள்ளும் 1,161 இறுதி ஆண்டு மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த மாணவிகளுக்கு கடந்த 30-ந்தேதி பரிசோதனை மேற்கொண்டதில் மன்னார்குடி, திருவாரூரை சேர்ந்த 2 பேருக்கு எந்தவித அறிகுறிகள் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கல்லூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் கோவிந்தராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கல்லூரி நுழைவுவாயிலில் மாணவிகளுக்கு வெப்பபரிசோதனை செய்யப்படுவதையும் கிருமிநாசினி கைகளில் தெளிக்கப்பட்டு மாணவிகள் அனுமதிக்கப்படுவதை, கை கழுவுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். மாணவிகள் அனைவரும் வகுப்பறையில் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.

தனிஅறை

நிர்வாகத்தின் சார்பில் மாணவிகள் கல்லூரிக்கு வந்தபின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு வெப்பபரிசோதனை செய்வதற்கும், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலமாக உடல்நிலையை பரிசோதனை செய்வதற்கும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த தேவையான தனிஅறை ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி உள்ள 114 மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும், தொடர்ந்து விழிப்புணர்வுடன் கண்காணித்திடவும் கல்லூரி முதல்வரை கலெக்டர் அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு

பின்னர் கல்லூரி கல்வி இணைஇயக்குனர் உ‌ஷா கூறுகையில், ‘‘அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அரசின் வழிகாட்டுதலின்படி நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’என்றார்.

ஆய்வின்போது கல்லூரி முதல்வர் சின்சியாசெல்வி, மாநகராட்சி மாநகர்நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story