வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - இன்று நடக்கிறது
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 5 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
வேலூர்,
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி., சத்துவாச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், வடுகந்்தாங்கல் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு காலை 25 மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி ஒத்திகை நடைபெறும். ஒருநாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு எவ்வளவு நேரமாகும். காத்திருப்போர் அறை, கண்காணிப்பு அறை உள்ளிட்டவை உள்ளதா, தடுப்பூசி போடும் நபரின் செல்போனிற்கு குறுந்தகவல் செல்கிறதா? என்பது போன்ற ஒத்திகைகள் செய்யப்படும்.
வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறைக்கு சொந்தமான 2 குளிர்சாதன மருந்து சேமிப்பு கிடங்குகள், 4 அரசு மருத்துவமனைகளில் 8 கிடங்குகள், 13 நகர்புற சுகாதார நிலையங்களில் 25 சேமிப்பு கிடங்குகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 109 மருந்து சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன. அங்கு கொரோனா தடுப்பூசி சேமித்து வைக்கப்படும். முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களான மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story