பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து 2-வது நாளாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு - 410 பள்ளிகளில் நடந்தது
பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து இம்மாவட்டத்தில் உள்ள 410 பள்ளிகளிலும் 2-வது நாளாக பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகர்,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் கடந்த 2 நாட்களாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிட்டது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தொகுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 190 அரசு பள்ளிகள், 90 அரசு உதவிபெறும் பள்ளிகள், 86 மெட்ரிக் பள்ளிகள், 39 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என ஆக மொத்தம் 410 பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பல பள்ளிகளில் பெற்றோர் கூறும் கருத்துக்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்கலாம் என்றும், பள்ளிகளில் மாணவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளை திறந்தால் நோய் பாதிப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் தெரிவித்த கருத்துக்களை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் இதனை தொகுத்து பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story