இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை இறுக்கி காதலனே கொலை செய்தது அம்பலம் - உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்


இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை இறுக்கி காதலனே கொலை செய்தது அம்பலம் - உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்
x
தினத்தந்தி 8 Jan 2021 3:16 PM GMT (Updated: 8 Jan 2021 3:16 PM GMT)

கள்ளிமந்தையம் அருகே இளம்பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கழுத்தை இறுக்கி அவரது காதலனே கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த நண்பரும் போலீசில் சிக்கினார்.

சத்திரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள வாகரையில் சாலையோரத்தில், கடந்த 5-ந்தேதியன்று 20 வயது இளம்பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த பெண், ஜெயஸ்ரீ (வயது 20) என்று தெரியவந்தது. இவர், வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி இந்திராநகரை சேர்ந்த கொத்தனார் கதிர்வேல் என்பவரின் மகள் ஆவார்.

இந்தநிலையில் ஜெயஸ்ரீயின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதற்கு அவரது செல்போனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தினர்.

அதாவது ஜெயஸ்ரீயிடம் செல்போனில் யார்? யார்? பேசி உள்ளனர் என்ற பட்டியலை போலீசார் சேகரித்தனர். அப்போது, பழனி அருகே உள்ள கோம்பைபட்டியை சேர்ந்த தங்கதுரை (25) என்பவர் ஜெயஸ்ரீயிடம் அதிக நேரம் பேசி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது நண்பர் ஜெகநாதன் (25) என்பவருடன் சேர்ந்து, ஜெயஸ்ரீயின் கழுத்தை இறுக்கி தங்கதுரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

வேடசந்தூர் அருகே உள்ள தனியார் மில்லில் தங்கதுரை வேலை செய்தார். அதே மில்லில் ஜெயஸ்ரீயும் பணிபுரிந்தார். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கதுரையை ஜெயஸ்ரீ வற்புறுத்தி வந்தார். இதற்கு அவர், தனது குடும்பத்தினர் ஒத்து கொள்ள மாட்டார்கள் என்று கூறி காலம் தாழ்த்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் ஜெயஸ்ரீயின் தொல்லை அதிகமானதால் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தங்கதுரை கூறினார். இதற்கு ஜெயஸ்ரீயும் சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து தங்கதுரை, ஜெயஸ்ரீ ஆகியோர் கடந்த 1-ந்தேதி ஒட்டன்சத்திரத்துக்கு வந்தனர். பின்னர் தங்கதுரையின் நண்பர் ஜெகநாதனுடன் சேர்ந்து 3 பேரும் வாகரை பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 2 பேரும் சேர்ந்து, கயிற்றால் கழுத்தை இறுக்கி ஜெயஸ்ரீயை கொலை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவல், போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் ஜெயஸ்ரீயின் உடல், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அங்கு குவிந்தனர்.

இதற்கிடையே ஜெயஸ்ரீயின் சாவுக்கு இழப்பீடு கேட்டு அவரது உறவினர்கள் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான வேனை, ஜெயஸ்ரீயின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயஸ்ரீயின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர்.

இந்தநிலையில் தனியார் மில் வேனை சேதப்படுத்தியதாக ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ெஜயஸ்ரீயின் உறவினர்களான நவீன் வளவன் (19), சுரேஷ்குமார் (24), எம்.சரவணன் (31), டி.சரவணன் (25), முத்துப்பாண்டி (27), முத்துவேல் (50) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

Next Story