முகநூல் மூலம் பழக்கமான மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
முகநூல் மூலம் பழக்கமான 17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கொரோனா காரணமாக அவர் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் பல இடங்களில் மாணவியை தேடி பார்த்தனர். ஒரு வாரத்துக்கும் மேலாகியும் மாணவி கிடைக்க வில்லை.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மாணவியின் செல்போனுக்கு அதே பகுதியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் சண்முகம் (30), கடலூரை சேர்ந்த ஏழுமலை ஆகியோர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வேளாங்கண்ணி சென்று மாணவியை மீட்டு விசாரித்தனர்.
இதில், சண்முகம், ஏழுமலை ஆகியோர் சேர்ந்து தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்த திடுக்கிடும் தகவலை மாணவி போலீசாரிடம் கூறினார். ஆன்லைனில் படிப்பதற்காக பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போனை பயன்படுத்தி முகநூல், வாட்ஸ்-அப் மூலம் மாணவி புதிய நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.
அந்த மாணவிக்கு முகநூல் மூலம் கடலூரை சேர்ந்த ஏழுமலையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மாணவியிடம் நைசாக பேசி தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். அவரை எப்படி சந்திக்க செல்வது என மாணவி நினைத்தபோது, கார் டிரைவர் சண்முகம் பழக்கமாகி உள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவி, சண்முகத்திடம் கடலூர் வாலிபரை சந்திக்க எப்படி செல்வது என்று ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர் தான் உதவி செய்வதாக கூறியுள்ளார். அதை நம்பி அந்த மாணவி வந்துள்ளார். உடனே சண்முகம், மாணவியை ஊட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஒரு அறையில் மாணவியை 3 நாட்கள் அடைத்து வைத்து டிரைவர் சண்முகம் பாலியல்பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர், அந்த மாணவியை காரில் அழைத்துச்சென்று திருச்சியில் கொண்டுபோய் விட்டுள்ளார். அங்கு மாணவியை சந்தித்த முகநூல் வாலிபர் ஏழுமலை யும் 3 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதில் உடல் மற்றும் மனரீதியாக மாணவிக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் டிரைவர் சண்முகம், ஏழுமலை ஆகிய 2 பேர் மீதும் கோவை மேற்கு பகுதி அனைத்துமகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மாணவியை அறையில் அடைத்து வைத்து 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story