கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு கோழிகளை கொண்டு வர தடை - கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தகவல்
கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு கோழிகளை கொண்டு வர தடை விதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கேரளாவில் உள்ள ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்து கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்குள் பறவை காய்ச்சல் நுழையாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. கேரள எல்லையில் உள்ள மைசூரு, தட்சிண கன்னடா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலையை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகத்திற்கு கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் முட்டைகளை தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கர்நாடகத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை இல்லை. ஏனென்றால் மாநிலத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை. அதனால் பொதுமக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேக வைத்து சாப்பிடலாம். பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டுவர எந்த தடையும் இல்லை.
இவ்வாறு பிரபுசவான் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story