பறவை காய்ச்சல் எதிரொலி; வண்டலூர் பூங்கா பறவைகள் இருப்பிடங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்


வண்டலூர் பூங்கா
x
வண்டலூர் பூங்கா
தினத்தந்தி 9 Jan 2021 1:28 AM GMT (Updated: 9 Jan 2021 1:28 AM GMT)

பறவை காய்ச்சல் எதிரொலியாக வண்டலூர் பூங்கா பறவைகள் இருப்பிடங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பறவைகளின் நடமாட்டம்
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ள நிலையில் மத்திய உயிரில் பூங்கா ஆணையம் அனைத்து உயிரியல் பூங்காக்கள் மற்றும் தலைமை வனவிலங்கு அதிகாரிகளுக்கு அவசரமாக ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

அதில் உயிரியல் பூங்காக்களில் கூண்டில் வைத்து பராமரிக்கப்படும் பறவைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் அதிக அளவில் பறவைகள் வெளியில் இருந்து வந்து செல்லும் பகுதியாக உள்ள ஓட்டேரி ஏரி பகுதியில் உயர் கோபுரம் மூலம் தொடர்ந்து பறவைகளின் நடமாட்டம் மற்றும் ஏரிக்கரையோரம் ஏதாவது பறவைகள் இறந்து கிடக்கிறதா? என்று ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்படும் நெருப்புக்கோழி, மயில்கள் மற்றும் பறவைகள் உள்ள இருப்பிடங்களில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

பூங்கா மருத்துவர்களிடம்இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பறவை காய்ச்சல் நோய் கேரளாவில் உறுதி செய்யப்பட்ட நிலையில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வண்டலூர் பூங்காவில் கூண்டில் வைத்து பராமரிக்கப்படும் பறவைகளின் நடவடிக்கைகளை ஊழியர்கள் மூலம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் பூங்கா வளாகத்திற்குள் ஏதாவது பறவைகள் இறந்து கிடந்தாலும் அல்லது மயங்கிய நிலையில் இருந்தாலும் அதனை பற்றிய தகவல்களை உடனடியாக பூங்கா மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் பூங்காவின் வளாகத்தில் உள்ள ஒட்டேரி ஏரியில் அதிக அளவில் பறவைகள் வருவது வழக்கம் அந்த பகுதியை தொடர்ந்து கவனித்து வருகிறோம.் மேலும் நோய் தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story