புதுவை மக்களை காக்க பீரங்கியே வந்தாலும் சந்திப்போம்: புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்


தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசிய போது
x
தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசிய போது
தினத்தந்தி 9 Jan 2021 8:02 AM IST (Updated: 9 Jan 2021 8:02 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மக்களை காக்க பீரங்கியே வந்தாலும் சந்திப்போம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

ராணுவத்தை வைத்து மிரட்டல்
கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவை மறைமலையடிகள் சாலையில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. 

போராட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

டெல்லியில் விவசாயிகள் கோடிக்கணக்கில் திரண்டு அமைதியான முறையில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதேபோல் நாமும் அமைதியாக எதிர்ப்பு காட்டவேண்டும்.

கவர்னர் கிரண்பெடியை பிரதமர் மோடி திரும்பப்பெற வலியுறுத்தி நாம் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். ஆனால் ராணுவத்தை கொண்டு வந்து நம்மை மிரட்டி விரட்டியடிக்க நினைக்கிறார்கள்.

புதுவை மக்களுக்கான நலத்திட்டங்களை தடுக்கும் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக நானும் கூட்டணி தலைவர்களும் பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். மத்திய அரசு நமக்கு சேரவேண்டிய நிதியைக்கூட தரவில்லை. மக்கள் ஏற்காத திட்டங்களை நம்மீது திணிக்கிறார்கள்.

களங்கம் கற்பிக்க முயற்சி
கடந்த 4½ ஆண்டுகளாக நான் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியும் நமக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை. கொரோனா காலத்தில்கூட மாநில நிதியைக்கொண்டு தான் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தோம். கவர்னர் கிரண்பெடி நமக்கு எந்த அளவுக்கு தொல்லைதர வேண்டுமோ அந்த அளவுக்கு கொடுத்தார். வேலைவாய்ப்புகளை தடுத்தார். காவலர் வயது வரம்பு தளர்வினை அனுமதிக்க மறுத்தார்.

அமைச்சரவையின் 51 முடிவுகளை கிடப்பில் போட்டுவிட்டு மக்கள் மத்தியில் அரசின் பெயருக்கு களங்கம் கற்பிக்க பார்க்கிறார். இதனால் நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம்.

ஏற்றதை மறுத்தார்
அப்போது கவர்னர் கிரண்பெடி உடனடியாக டெல்லி சென்றுவிட்டார். எங்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தார். ஆனால் டெல்லி சென்ற கவர்னர் கிரண்பெடியை அப்போது உள்துறை மந்திரியாக இருந்த ராஜ்நாத்சிங் புதுவைக்கு திருப்பி அனுப்பிவைத்தார். எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் கூறினார்.

அந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் மில்களை மூடக்கூடாது, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு உரிய நிதி அதிகாரத்தை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்தோம். பேச்சுவார்த்தையின்போது அவற்றை ஏற்றுக்கொண்ட கவர்னர் கிரண்பெடி அதன்பின் மறுத்தார். காவலர் நியமனத்துக்கும் தடையாக இருந்தார்.

அதிகாரத்தை பறிக்கும் வேலை
புதுவையில் பொருட்களின் வரியை குறைத்தால்தான் வருமானம் வரும். ஆனால் வரியை குறைப்பதற்கு தடையாக உள்ளார். மக்களிடையே மத துவே‌‌ஷத்தை உருவாக்குகிறார். மோடியும், கிரண்பெடியும் இணைந்து புதுவை அதிகாரத்தை பறிக்கும் வேலையினை செய்கிறார்கள். அதை தடுத்து நிறுத்துவது நமது கடமை. அதற்காகத்தான் இந்த போராட்டம்.

மக்களின் அதிகாரத்தை பறித்தால் மோடியானலும், பெடியானாலும் உயிர்த்தியாகம் செய்தாவது மக்களை காப்போம். நமக்கு மக்கள் நலன்தான் முக்கியம். இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தின்போது பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இப்போதும் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் வேலையை செய்கிறார்கள். கவர்னர் கிரண்பெடி சென்றால்தான் நாம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.

பீரங்கி வந்தாலும் சந்திப்போம்
இவர் இருக்கும்வரை நமது உரிமைகள் பறிக்கப்படும். கவர்னர் கிரண்பெடியை புதுச்சேரியைவிட்டு உடனடியாக பிரதமர் வெளியே அனுப்பவேண்டும். நமது போராட்டம் எப்போதும் அமைதி வழியில் இருக்கவேண்டும். மழை, வெயில், புயல், பீரங்கி என எது வந்தாலும் அதை சந்திப்போம். எதையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். அப்படி செய்தால்தான் மக்களை காக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பந்தலிலேயே தூங்கிய நாராயணசாமி
போராட்டம் நடந்த பந்தலிலேயே முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கினர். இரவில் சாப்பிட்ட அவர்கள் அங்கேயே படுத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து படுக்கை விரிப்புகள் கொண்டு வரப்பட்டன. இரவு 10½ மணியளவில் நாராயணசாமி உள்பட அனைவரும் தூங்கச் சென்றனர்.

Next Story