நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 24 ஆடுகளை கடித்துக்கொன்றது


வடக்கு விஜயநாராயணம் அருகே வீரனாஞ்சேரி பகுதியில் சிறுத்தை தாக்கியதில் இறந்த ஆடுகளை படத்தில் காணலாம்.
x
வடக்கு விஜயநாராயணம் அருகே வீரனாஞ்சேரி பகுதியில் சிறுத்தை தாக்கியதில் இறந்த ஆடுகளை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 9 Jan 2021 3:54 AM GMT (Updated: 9 Jan 2021 3:54 AM GMT)

வடக்கு விஜயநாராயணம் பகுதியில் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 24 ஆடுகளை கடித்துக்கொன்றது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டத்தில் புகுந்த சிறுத்தை
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை தனது குட்டியுடன் நடமாடியதை பார்த்ததாக அப்பகுதியினர் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் வடக்கு விஜயநாராயணத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தை அடித்துக் கொன்றது. இதையடுத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர். ஆனாலும் சிறுத்தை சிக்கவில்லை.

இந்த நிலையில் அந்த சிறுத்தை மீண்டும் அட்டகாசம் செய்துள்ளது. வடக்கு விஜயநாராயணம் அருகே வெங்கட்ராயபுரம் வீரனாஞ்சேரி பகுதியில் பிச்சைப்பழம் என்பவருக்கு (வயது 45) சொந்தமான தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் சிறுத்தை புகுந்தது. அங்கு தோட்டத்தில் ஆட்டுக்கிடையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது. இதில் 22 ஆடுகள் இறந்தன. மேலும் 10 ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தன.

ஆடுகள் சாவு
இதேபோன்று வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் குட்டதட்டப்பாறை பகுதியில் புஷ்பராஜிக்கு (36) சொந்தமான ேதாட்டத்தில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை, அங்கு கயிற்றில் கட்டப்பட்டு இருந்த பசுவின் கன்றுக்குட்டியை கடித்து குதறி கொன்றது. இதில் மற்றொரு கன்றுக்குட்டியும் காயம் அடைந்தது.

மேலும் பக்கத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த 2 ஆடுகளையும் கடித்துக் கொன்றது.

நேற்று காலையில் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் தங்களது ஆடுகள், கன்றுக்குட்டி ஆகியவற்றை சிறுத்தை அடித்துக் கொன்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து நெல்லை வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் ஆய்வு
உடனே மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் அறிவுரையின்பேரில், வனச்சரக அலுவலர் கருப்பையா தலைமையில் வனவர் பிரகாஷ், வன காப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று, சம்பவ இடங்களை பார்வையிட்டனர். தோட்டங்களில் பதிவான சிறுத்தையின் கால்தடங்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கு தோட்டங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் பரமசிவன் உள்ளிட்ட வருவாய் துறையினரும் இறந்த ஆடுகள், கன்றுக்குட்டியை பார்வையிட்டனர்.

சிறுத்தை தாக்கியதில் இறந்த ஆடுகள், கன்றுக்குட்டி ஆகியவற்றை வனத்துறை டாக்டர் மனோகரன், கால்நடைத்துறை டாக்டர் ராஜூ ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். படுகாயம் அடைந்த ஆடுகள், கன்றுக்குட்டிக்கும் சிகிச்சை அளித்தனர்.

பொதுமக்கள் அச்சம்
கடந்த சில நாட்களாக வடக்கு விஜயநாராயணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சங்கனாங்குளம், திருவடநேரி, ஏழாங்கால் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் தோட்டங்களில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த ஆடுகள், கன்றுக்குட்டி போன்றவற்றை கடித்துக் கொன்றுள்ளது.

இதனால் பகல் நேரங்களிலும் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சிறுத்தை நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் முறையாக கூண்டு வைத்து அவற்றை பிடித்து சென்று வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story