கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை; அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி ஒத்திகை
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் எம்.அனிதா, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுகாதார பணியாளர்களுக்கு சீருடை
முன்னதாக கோவில்பட்டி நகரசபை கூட்ட அரங்கில் 65 பெண்கள் உள்பட 165 சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சுகாதார பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
தொடர்ந்து கோவில்பட்டி மெயின் ரோடு ரேவாபிளாசா அருகில் நகரசபை கல்விநிதியின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தினசரி சந்தை நுழைவுவாயில்...
பின்னர் கோவில்பட்டி நகரசபை பொதுநிதியின் கீழ் ரூ.8.50 லட்சம் செலவில் நகரசபை தினசரி சந்தை பிரதான நுழைவாயிலை அகலப்படுத்தி, புதிய நுழைவாயில் கட்டும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், என்ஜினீயர் கோவிந்தராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆர்.சத்தியா, மாவட்ட கவுன்சிலர்கள் கே.சந்திரசேகர், தங்க மாரியம்மாள் தமிழ்செல்வன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், மார்க்கெட் சிறு வியாபாரிகள் சங்க தலைவர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்குஇலவச சைக்கிள்
கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி. சூசை மேல்நிலைப்பள்ளி, கம்மவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லூயிஷா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 469 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி, கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீதா மகேஸ்வரி, கயத்தாறு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வினோபாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story