குன்னூரில் மழை: மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன - போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் மழை காரணமாக சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்,
குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக் செல்லும் சாலையில் சி.எம்.எஸ். அருகே மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்தது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். இதனால் அங்கு 45 நிமிடங்களுக்கு பிறகு போக்குவரத்து சீரானது. அதுபோன்று குன்னூர் பாய்ஸ் கம்பெனியில் இருந்து கேட்டில் பவுண்டு செல்லும் சாலையில் மரம் செடி-கொடிகளுடன் வேரோடு சாய்ந்து முறிந்து விழுந்தது. இது குறித்து .தகவலறிந்த கன்டோன்மெண்ட் சுகாதார துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள்.
இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இங்கு நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-2, கெத்தை-6, குன்னூர்-44, பர்லியார்-45, உலிக்கல்-20, எடப்பள்ளி-34, கோத்தகிரி-11, தேவாலா-37 என மொத்தம் 276 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 9.52 ஆகும்.
Related Tags :
Next Story