பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு காவல்குழு - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு காவல்குழு - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Jan 2021 4:17 PM IST (Updated: 9 Jan 2021 4:17 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க காவல்துறை சார்பில் கிராமங்கள்தோறும் கிராம விழிப்புணர்வு காவல்குழுவை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தொடங்கிவைத்தார்.

குடியாத்தம்,

பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வைக்க கிராமங்கள்தோறும் கிராம விழிப்புணர்வு காவல் குழு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மணாங்குப்பம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு காவலர்கள் நியமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீதாராமன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரகுபதி, ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் செந்தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:-

காவல் துறை பொது மக்களின் நண்பன் என கூறினாலும் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இடைவெளிஉள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் கிராமங்கள் தோறும் கிராம விழிப்புணர்வு காவல் குழு அமைக்கப்பட்டு வருகிறது. அந்த குழுவில் ஒரு காவலர் நியமிக்கப்படுவார் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் காவலர் உடன் இணைந்து செயல்படுவார்கள். அந்த குழு பொதுமக்களின் காவல் துறை தொடர்பான பிரச்சினைகள் மட்டுமல்லாது அரசின் பிற துறைகளின் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும்.

கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான போராட்டங்கள் இருந்தாலும், முன்விரோதம் தொடர்பாக கோஷ்டி மோதல்கள் ஏற்படும் நிலை உருவானாலும் அதை தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளிடம் கூறி பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க அந்த காவலர் உதவியாக இருப்பார். பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து காவல் நிலையம் செல்வதைத்தவிர்த்து குழுவிடம் புகார் கொடுத்தால் அவர்கள் விரைந்து செயல்பட்டு பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள். இதனால் பொதுமக்கள் பிரச்சினை குறித்து அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை என்றார்.

Next Story