கரூர் அருகே பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கரூர் அருகே பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மான்விழி (வயது 32). இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டு கதவை பூட்டி விட்டு, கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மான்விழி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
மேலும் அலமாரியில் அவர் வைத்திருந்த 3 பவுன் தங்கநகை, ரூ.30 ஆயிரம் மற்றும் சில்வர் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மான்விழி பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story