பா.ஜ.க. இல்லையென்றால் தமிழக அரசியல் இல்லை - மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு


பா.ஜ.க. இல்லையென்றால் தமிழக அரசியல் இல்லை - மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு
x
தினத்தந்தி 9 Jan 2021 1:25 PM GMT (Updated: 9 Jan 2021 1:25 PM GMT)

பா.ஜ.க. இல்லையென்றால் தமிழக அரசியல் இல்லை என்று மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.

பரமக்குடி,

ராமநாதபுரத்தில் நடைபெறும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சிக்காக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் ராமநாதபுரம் வந்தார். அவருக்கு பரமக்குடி ஐந்து முனை பகுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். சத்திரக்குடியில் பா.ஜ.க. ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:- ராமன் நாட்டிற்கு வருகை தந்ததை சிறப்பாக கருதுகிறேன். பா.ஜனதா கட்சி தமிழ்நாட்டில் எங்கே உள்ளது. அவர்களால் இங்கு காலூன்ற முடியுமா என கேட்டனர். பா.ஜ.க. இல்லையென்றால் தமிழக அரசியல் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலும் மூத்த தலைவர்கள் அனைவரும் உழைப்பைக் கொடுத்து இன்று கிராமம் தோறும், தெருக்கள் தோறும், பா.ஜ.க. கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

இந்த தேசத்தின் வளர்ச்சி தான் நமது வளர்ச்சி. தமிழ்நாட்டில் 65 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பை பாரத பிரதமர் மோடி வழங்கி உள்ளார். 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என விரைவில் நல்ல அறிவிப்பு வரும்.

பா.ஜ.க. சார்பில் வேல்யாத்திரையின்போது தைப்பூச திருவிழாவிற்கு அரசு விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு விடுமுறை அறிவித்துள்ளார். அவருக்கு பா.ஜ.க.சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவேல் யாத்திரைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இங்குள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க.வினர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சுப. நாகராஜன், குப்புராம், மாநில எஸ்.சி.அணி தலைவர் பொன். பாலகணபதி, மாநில பொதுச்செயலாளர் நயினார் நாகேந்திரன், மண்டலத் தலைவர் சண்முகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் காளிதாஸ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story