தஞ்சையில், போலீஸ் என கூறி துப்பாக்கி முனையில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை
தஞ்சையில் போலீஸ் என கூறி துப்பாக்கி முனையில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் மலையப்பெருமாள்(வயது 60). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பாலாஜி(25), அதே மளிகை கடையில் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார்.
திருமணமான மகளுக்கு சீர்வரிசை வழங்குவதற்காக வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக நேற்று காலை 7.45 மணிக்கு மலையப்பெருமாள் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 3 பேர், மலையப்பெருமாள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் மலையப்பெருமாளிடம், தாங்கள் போலீஸ் எனவும், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி வீட்டிற்குள் சென்றனர்.
பின்னர் அவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி செங்கிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தை உங்களது கார் ஏற்படுத்தியது எனவும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உங்கள் காரின் நம்பர் பதிவாகி இருப்பதாகவும் மலையப்பெருமாளிடம் தெரிவித்தனர்.
ஆனால் அப்படி எந்த விபத்திலும் தனது கார் சிக்கவில்லை என அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து கார் அந்த நேரத்தில் வீட்டில் நின்றதா? என்பதை அறிய வேண்டும் என்று கூறி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை 3 பேரும் ஆய்வு செய்தனர். ஆனால் 7 நாட்கள் பதிவான காட்சிகள் மட்டுமே இருந்தது. உடனே மளிகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் விபத்தில் உங்களது கார் சிக்கியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இந்த வழக்கை முடிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு எங்களிடம் கூறிவிட்டார். வழக்கை முடித்து வைக்க ரூ.1 கோடி தர வேண்டும் என கூறினர். ஆனால் எதற்காக பணம் தர வேண்டும் என மலையப்பெருமாள் கூறியதால் அவரது மகன் பாலாஜியை 3 பேரும் மாடிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரது வாயில் பிளாஸ்திரி போட்டு ஓட்டியதுடன் கை, கால்களை கயிற்றால் கட்டி கம்பால் அடித்தனர். பின்னர் மலையப்பெருமாள், அவரது மனைவி சாந்தி, மகள் நிவேதா ஆகிய 3 பேரையும் மாடிக்கு வரவழைத்து அவர்களது கைகளையும் கயிற்றால் கட்டி வைத்தனர்.
தொடர்ந்து மலையப்பெருமாளிடம் அவசரமாக ரூ.50 லட்சம் கொடுத்தாலே உங்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுகிறோம். இல்லையென்றால் உங்களை சுட்டுக்கொலை செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்துவிட்டார் என 3 பேரும் கூறினர்.
அப்போது அவர்களில் ஒருவர், கைத்துப்பாக்கியை எடுத்து மலையப்பெருமாளை நோக்கி நீட்டியதுடன் நீ இறந்துவிட்டால் இந்த பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? என கூறி மிரட்டியுள்ளார்.
அப்போது மலையப்பெருமாள் தனக்கு மயக்கம் வருவதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அவரது கைகளை அவிழ்த்து விட்டனர். இதனையடுத்து மாடியில் இருந்து கீழே வந்த அவர், வீட்டிற்குள் மனைவி, மகள், மகன் ஆகியோர் துப்பாக்கி முனையில் இருப்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். யாரிடமும் இந்த விவரத்தை அவரால் கூற முடியவில்லை.
இந்த நிலையில் போலீஸ் என கூறிய 3 பேரும் மாடியில் இருந்து கீழே வந்து வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், பையில் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு வெளியே வந்து மளிகை கடையின் அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி செல்ல முயன்றனர்.
இதை பார்த்த மலையப்பெருமாள் வீட்டிலிருந்து வெளியே வந்து திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு மளிகை கடையில் இருந்து வெளியே வந்த ஊழியர்கள், மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த ஒருவரை, கடை ஊழியர் பிடிக்க முயற்சி செய்தபோது அவரை கைகளால் தாக்கியதால் ஊழியரின் பிடி தளர்ந்தது.
பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் மலையப்பெருமாள் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள், மலையப்பெருமாள், அவரது மனைவி, மகள், மகனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மேலே நடந்த சம்பவங்களை விளக்கமாக தெரிவித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, பீரோ, கட்டில் ஆகியவற்றில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story