பிளேடால் கையை அறுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை - நாகர்கோவிலைச்சேர்ந்தவர்
பெண்ணாடத்தில் பிளேடால் கையை அறுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணாடம்,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வல்லன்குமாரன்விளை பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் மகன் பினுகுட்டன் (வயது 36). இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கொடிக்களம், திருவட்டத்துறை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ரோசி. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
ரோசி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் இறந்தார். இதையடுத்து பினுகுட்டன், பெண்ணாடம் பஸ் நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் மதுரையில் உள்ள ரோசியின் தந்தை வீட்டில் வசித்து வருகின்றனர்.
மனைவி ரோசி இறந்தது முதல், பினுகுட்டன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் பினுகுட்டன் தங்கியிருந்த அறைக்கு திருமலை அகரம் கிராம உதவியாளர் கரிகாலன் வந்துள்ளார். அப்போது அறையின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தும் எந்தவொரு தகவலும் இல்லை.
இதையடுத்து அறையில் இருந்த ஜன்னல் வழியாக கரிகாலன் உள்ளே பார்த்தார். அப்போது, பினுகுட்டன், அங்குள்ள மின்விசிறியில் கைலியால் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பினுகுட்டுவின் உடலை பார்வையிட்டனர். அப்போது பினுகுட்டனின், தனது இடது கை அறுக்கப்பட்டு ரத்தம் வடிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பினுகுட்டன் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story