நாகமங்கலத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு


நாகமங்கலத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Jan 2021 4:16 AM IST (Updated: 10 Jan 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலராக போலீஸ்காரர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியமித்து அறிமுகப்படுத்தி வருகிறார்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலராக போலீஸ்காரர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியமித்து அறிமுகப்படுத்தி வருகிறார். அதன்படி விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் மற்றும் பட்டகட்டாங்குறிச்சி கிராமங்களுக்கான விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி நாகமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கலந்து கொண்டு, திருமுருகன் என்ற போலீஸ்காரரை விழிப்புணர்வு காவல் அலுவலராக நியமித்து பொதுமக்களிடையே அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கிராமத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் குறிப்பாக திருட்டு, மணல் கடத்தல், சந்தேகத்திற்கிடமான நபர்களை அடையாளம் காணுதல், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை போன்றவை மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகளை கிராம விழிப்புணர்வு காவல் அலுவலரிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்து பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே இணைப்பு பாலமாக செயல்படுவார். இதன் மூலம் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்படுவதோடு போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே நட்புறவு வளரும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். நிகழ்ச்சியின் முடிவில் முதியவருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன், விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story