ஆண்டிமடம் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையில் ஆபத்தான பள்ளங்கள்


ஆண்டிமடம் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையில் ஆபத்தான பள்ளங்கள்
x
தினத்தந்தி 10 Jan 2021 4:23 AM IST (Updated: 10 Jan 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே திருக்களப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழநெடுவாய் கிராமத்தில் இருந்து திருக்களப்பூர் கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி உள்ளது. 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது ஆகும். இந்த தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

கீழநெடுவாய் கிராம மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ஊராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றுக்கு இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் இந்த வழியாக செல்வது வழக்கம். ஆனால் சாலை மோசமான நிலையில் உள்ளதால், இருசக்கர வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன. நடந்து செல்பவர்களின் கால்களை, ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன.

ஆபத்தான பள்ளங்கள்

ேமலும் தற்போது பெய்த கனமழையால் இந்த சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக கிராம மக்கள் நடந்து செல்வதற்கு கூட மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பள்ளங்களின் அருகே அபாயம் என்று குறிக்கும் வகையில் சிகப்பு நிற துணிகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவில் அந்த வழியாக சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தால் உயிரிழப்பு போன்ற விபரீத சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையினால் சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களையும், சாலையையும் சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story