கர்நாடக இடைத்தேர்தல்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை மேலிடம் முடிவு செய்யும்; டி.கே.சிவக்குமார் பேட்டி


டி.கே.சிவக்குமார்
x
டி.கே.சிவக்குமார்
தினத்தந்தி 10 Jan 2021 8:40 AM IST (Updated: 10 Jan 2021 8:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் ஆலோசனை
கர்நாடகத்தில் விரைவில் நடைபெற உள்ள பெலகாவி நாடாளுமன்ற தொகுதி, மஸ்கி மற்றும் பசவகல்யாண் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் குறித்து பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர்களுடன், டி.கே.சிவக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேலிடம் முடிவு செய்யும்
மாநிலத்தில் நடைபெற உள்ள பெலகாவி, மஸ்கி, பசவகல்யாண் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் அந்த தொகுதிகளின் பிரமுகர்களுடன் அடுத்த கட்டமாக ஆலோசிக்கப்பட உள்ளது. அவர்களது கருத்துகளை கேட்பதும் முக்கியமாகும்.

அதன்பிறகே 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உப்பள்ளிக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதன்பிறகு, 3 தொகுதிகளின் பிரமுகர்களுடன் ஆலோசிக்க முடிவு செய்துள்ளேன். அதன்மூலம் தேர்வு செய்யப்படும் வேட்பாளர்களின் பட்டியல் காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடத்திற்கு சிபாரிசு செய்யப்படும்.

மந்திரிகளுக்கு தொடர்பு
ஆனால் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். மோசடி வழக்கில் கைதான யுவராஜிக்கு, மந்திரிகள் சிலருடன் தொடர்பு இருப்பது பற்றி தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கூடுதல் தகவல்களை சேகரித்துவிட்டு விரிவாக பேசுகிறேன். கைதான யுவராஜிக்கு, அரசியல் பிரமுகர்களுடன் உள்ள தொடர்பு குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story