பேரிடர் காலங்களில் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பேச்சு


பேரிடர் காலங்களில் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2021 8:41 AM IST (Updated: 10 Jan 2021 8:41 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் காலங்களில் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்று திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இலவச தாய் சேய் நல ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இலவச அமரர் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குடும்ப விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ரெட்கிராஸ் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலு முன்னிலை வகித்தார்.

விழாவில் டிரைவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற கோலப்போட்டி, இசை நாற்காலி போட்டி, யானைக்கு வால் வரைதல் போட்டி, பானை உடைத்தல், உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழிப்புணர்வுடன் செயல்பாடு

பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டு வரும் செஞ்சிலுவை சங்கத்தின் சேவைகள் பாராட்டுக்குரியது. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 24 மணிநேரமும் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த பணியில் அவர்கள் ஈடுபடுவதன் மூலம் அவர்களது குடும்பத்தினரும் சமூகப்பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதாகவே அமைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கண் டாக்டர் சிவக்குமார், நகராட்சி மேலாளர் முத்துக்குமார், நிர்வாகி அருள், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story