நாட்டிலேயே முதல் முறையாக கொப்பல் மாவட்டத்தில் 400 ஏக்கரில் பொம்மைகள் தயாரிப்பு தொழிற்சாலை; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்


முதல்-மந்திரி எடியூரப்பா பூமி பூஜையை தொடங்கிவைத்த காட்சி. அருகில் மந்திரிகள் ஜெகதீஷ் ஷெட்டர், பி.சி.பட்டீல்
x
முதல்-மந்திரி எடியூரப்பா பூமி பூஜையை தொடங்கிவைத்த காட்சி. அருகில் மந்திரிகள் ஜெகதீஷ் ஷெட்டர், பி.சி.பட்டீல்
தினத்தந்தி 10 Jan 2021 8:58 AM IST (Updated: 10 Jan 2021 8:58 AM IST)
t-max-icont-min-icon

கொப்பல் மாவட்டம் குகனூரு தாலுகா பானாபுராவில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் 400 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.

நாட்டிலேயே முதல் முறையாக கொப்பல் மாவட்டத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்.

எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்
கர்நாடகத்தில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் கொப்பல் மாவட்டம் குகனூரு தாலுகா பானாபுராவில் விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்திருந்தார். நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் இந்த தொழிற்சாலை அமைக்க மத்திய அரசும் அனுமதி அளித்திருந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. பானாபுரா கிராமத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது.

இந்த தொழிற்சாலைக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று பானாபுரா கிராமத்தில் நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

ரூ.5 ஆயிரம் கோடி செலவில்...
பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றும் விதமாக இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் கொப்பல் மாவட்டம் குகனூரு தாலுகா பானாபுராவில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தான் இந்த பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. 

ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த தொழிற்சாலை அமைகிறது.
இந்த தொழிற்சாலை மூலம் 40 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலை மூலமாக கர்நாடகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன், வேலை வாய்ப்பு இல்லாத பிரச்சினைக்கும் தீர்வு காண உதவியாக இருக்கும். இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பொம்மைகள் தயாரிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம்
இந்த தொழிற்சாலை மூலம் 2023-ம் ஆண்டில் ரூ.2,300 கோடி முதலீடு கிடைக்கும். நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட உள்ள இந்த தொழிற்சாலையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த தொழிற்சாலை, தேசிய நெடுஞ்சாலை 63-க்கு அருகேயே அமைந்திருக்கிறது. குறிப்பாக வணிக நகரமான உப்பள்ளிக்கு அருகேயே இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பில் முன் மாதிரியாக கர்நாடகம் திகழ உள்ளது.

நாட்டிலேயே விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் முதன்மையான தொழிற்சாலையாக இது இருக்கும். இனிவரும் காலங்களில் இந்த தொழிற்சாலை மூலமாக ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற முடியும். பொம்மைகள் தயாரிக்கும் மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகம் மாற உள்ளது. தொழிற்சாலைக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

பெண்களுக்கு வேலை வாய்ப்பு
இந்த பொம்மைகள் தயாரிக்கும் பணிகளில் பெரும்பாலும் பெண்கள் தான் ஈடுபடுகிறார்கள். கொப்பலில் அமைய உள்ள இந்த பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் அதிகளவில் பெண்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் கிடைப்பதுடன், அவர்களது வாழ்வாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இந்த தொழிற்சாலை பெண்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அத்துடன் கொப்பலில் அமையும் தொழிற்சாலை மூலமாக ஐதராபாத்-கர்நாடக பகுதிகளை சேர்ந்த மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகஅளவில் கிடைக்கும். இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலைக்காக அண்டை மாநிலங்களுக்கு செல்வது தடுக்கப்படும். ஐதராபாத், கர்நாடக பகுதியை சேர்ந்த மாவட்டங்கள் வளர்ச்சி அடைவதுடன், வளர்ச்சி பணிகளும் அதிகளவில் நடைபெற வாய்ப்புள்ளது. கொப்பலில் அமையும் விளையாட்டு பொம்மைகள் தொழிற்சாலையை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைக்க முடிவு செய்துள்ேளாம்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் ஜெகதீஷ் ஷெட்டர், பி.சி.பட்டீல், முன்னாள் மந்திரி தேஷ்பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story