பாரம்பரிய மீன் இனங்களை அழிக்கும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக்கை; கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை
பாரம்பரிய மீன் இனங்களை அழிக்கும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு எச்சரித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்
தேசிய பசுமை ஆணையம் தீர்ப்பாயத்தின் ஆணைப்படி வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இந்த மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. மேலும் 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால் அவற்றை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். மேலும் இந்த மீன்கள் மிகக் குறைந்த அளவு தண்ணீரில் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவையாகும். இந்த மீன்கள் நல்ல தண்ணீரில் வாழும் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும்.
வளர்க்க தடை
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை பண்ணை குட்டைகளில் அல்லது மீன் வளர்ப்புக் குளங்களில் வளர்த்தால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் குளங்களில் இருந்து தப்பித்து விட வாய்ப்புள்ளது. தப்பிச் செல்லும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று மற்ற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் தவிர மற்ற பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும்.
எனவே தடைசெய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆணையை மீறி நெல்லை மாவட்டத்தில் உள்ள மீன் வளர்ப்பாளர்கள் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு செய்தால் அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் அரசால் அறிவிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையில் ஆலோசனை பெற்று வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story