ஈரோடு மாவட்டம் முழுவதும் கிராம கண்காணிப்பு அலுவலர்களாக 545 போலீசார் நியமனம்; போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல்


ஈரோடு அக்ரஹாரம் வீதியில் கிராமப்புற காவலன் என்ற பெயர் பலகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை
x
ஈரோடு அக்ரஹாரம் வீதியில் கிராமப்புற காவலன் என்ற பெயர் பலகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை
தினத்தந்தி 10 Jan 2021 6:36 AM GMT (Updated: 10 Jan 2021 6:36 AM GMT)

ஈரோடு மாவட்டம் முழுவதும் கிராம கண்காணிப்பு அலுவலர்களாக 545 போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.

கிராம கண்காணிப்பு அலுவலர்கள்
காவல் துறை இயக்குனர் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 போலீசார் கிராம கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு அக்ரஹாரம் வீதியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கலந்து கொண்டு, இந்த திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பெயர் பலகையை திறந்து வைத்தார். 

இதில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். அக்ரஹார வீதியில் ஏட்டு சிவசாமி கிராம கண்காணிப்பு அலுவலராக 
நியமிக்கப்பட்டு உள்ளார்.

545 பேர் நியமனம்
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை கூறியதாவது:-
போலீஸ் -பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் இந்த கிராம கண்காணிப்பு அலுவலர்கள் செயல்படுவார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக சிறப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பற்றிய பெயர், செல்போன் எண்கள் போன்ற விவரம் அந்தந்த பகுதியில் உள்ள பலகையில் வைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலைய செல்போன் எண்கள், உயர் அதிகாரிகள் எண்களும் அதில் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு ஈரோடு மாவட்டம் 
முழுவதும் 545 விழிப்புணர்வு காவல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

குறைகள்
இவர்களுடைய முக்கிய பணி பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் குற்றத்தடுப்பு தகவல்களை சேகரிக்கும் பணி ஆகும். இந்த சிறப்பு அலுவலர்கள் தினமும் அந்தந்த பகுதி மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார்கள். குடும்ப பிரச்சினை, நிலத்தகராறு, பாலியல் தொந்தரவு உள்பட எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த சிறப்பு அலுவலரிடம் கூறலாம். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும். இது ஒரு நல்ல திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறினார்.

Next Story