மாவட்டத்தில் 984 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து - ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தகவல்


மாவட்டத்தில் 984 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து - ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2021 9:53 AM GMT (Updated: 10 Jan 2021 9:53 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில 984 முகாம்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அதிகாரிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் கார்த்திகா தலைமையில் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திலகம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி 1,48,443 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்காக கிராமப்புற பகுதிகளில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20 முகாம்களும் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் 4,083 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

மேலும் 18 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 95 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் வருகிற 17-ந்தேதி நடைபெறும் முகாமில் மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ பாதிப்பில்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story