கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் 45 சதவீதம் நிறைவு - சுகாதாரத்துறை இணை செயலாளர் தகவல்


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் 45 சதவீதம் நிறைவு - சுகாதாரத்துறை இணை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2021 3:51 PM IST (Updated: 10 Jan 2021 3:51 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் 45 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் தெரிவித்தார்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் கோவிந்தன், கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், உதவி செயற்பொறியாளர் மகாவிஷ்ணு, உதவி பொறியாளர்கள் பழனிசாமி, கீதா, திட்ட மேலாளர் மாணிக்கம் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் சிறப்பான முறையில் விரைந்து கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனை கட்டிடம் ஒன்று, 6 கல்லூரி கட்டிடங்கள், 12 குடியிருப்பு கட்டிடங்கள் என மொத்தம் 19 கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் 45 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும், கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், மாணவ, மாணவிகள் விடுதி, அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கான குடியிருப்பு கட்டிடங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனை கட்டிடம் ரூ.120.20 கோடி மதிப்பீட்டிலும், ரூ.113.77 கோடி மதிப்பீட்டில் கல்லூரி கட்டிடம் மற்றும் ரூ.104.98 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டிடம் என மொத்தம் ரூ.338.95 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story