அனுமந்தபுரம் கிராமத்தில் யானைகள் விரட்டியதில் 6 விவசாயிகள் படுகாயம்


அனுமந்தபுரம் கிராமத்தில் யானைகள் விரட்டியதில் 6 விவசாயிகள் படுகாயம்
x
தினத்தந்தி 10 Jan 2021 4:13 PM IST (Updated: 10 Jan 2021 4:13 PM IST)
t-max-icont-min-icon

அனுமந்தபுரம் கிராமத்தில் யானைகள் விரட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் விவசாயிகள் ராகி, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது ராகி நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பல விவசாயிகள் ராகியை அறுவடை செய்து நிலத்தில் அடுக்கி வைத்துள்ளனர். இந்த ராகியை அய்யூர் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் இரவில் காவலுக்கு இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 12-க்கும் மேற்பட்ட யானைகள் அனுமந்தபுரத்தில் ராகி பயிர்களை சேதப்படுத்தின. இதனை கண்ட விவசாயிகள் யானைகளை சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் விரட்டினர். அப்போது ஆக்ரோஷத்துடன் யானைகள் விவசாயிகளை விரட்டின.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தப்பியோடினர். இதில் ராஜா, மாதேவா, மல்லேஷ், ரவி, மல்லிகார்ஜுனன் மற்றும் சிவசங்கர் ஆகிய 6 பேர் யானைகள் விரட்டியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பலர் லேசான காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் 6 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் வனச்சரக அலுவலர் சுகுமார், வனத்துறையினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Next Story