மக்களின் தவறான புரிதல்களால் முட்டை விலை சரிவு: பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை
பறவை காய்ச்சல் குறித்த தவறான புரிதல்களால் முட்டை விலை சரிவடைந்து உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்,
இந்தியா முழுவதும் தற்போது முட்டை விலை குறைந்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு, முதல் முறையாக பறவை காய்ச்சல் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 25 முறை வந்துள்ள பறவை காய்ச்சல், வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் தென் இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் வந்துள்ளது.
ஆனால் இன்று வரை பறவை காய்ச்சல் காரணமாக இந்தியாவில் மனிதருக்கு எந்தவித நோய் தாக்குதலும் ஏற்படவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. பறவை காய்ச்சல் பற்றிய தவறான புரிதல்களை பொது மக்களுக்கு ஏற்படுத்தியதன் மூலம் முட்டை மற்றும் கோழியின் நுகர்வு ஓரளவு பாதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நோய் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும், கோழிப்பண்ணைகளில் கடைபிடிக்கப்படும் துல்லியமான நோய் தடுப்பு முறைகளினாலும் தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் தாக்குதல் இல்லை.
ஏற்கனவே பறவை காய்ச்சல் நோய் தாக்குதலுக்கு ஆளான கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நோய் தாக்குதல் மனிதர்களுக்கு இல்லை என்பதால் பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
ஆனால் சில வட இந்திய மாநிலங்களில் இப்போது தான் முதன் முறையாக பறவை காய்ச்சல் வந்துள்ளது. ஆகையால் அந்த மாநில அரசுகள் பறவை காய்ச்சல் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையால் தெளிவில்லாமல் முட்டை மற்றும் இறைச்சி கடைகளை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டு உள்ளன.
இதனால் முட்டை மற்றும் இறைச்சி விலை அந்த மாநிலங்களில் அதிகமாக குறைந்து உள்ளது. இந்த விலை குறைப்பு இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் பரவாது என்ற உண்மையை பொது மக்களுக்கு தெரிவித்து பொது மக்களை பீதியில் இருந்து காப்பாற்ற வேண்டும். மேலும் நமது உணவு சமைக்கும் முறை மூலம் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற உண்மையை மத்திய, மாநில அரசுகள் பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story