சேலத்தில் தங்கும் விடுதியில் சென்னை போலீஸ்காரர் தற்கொலை முயற்சி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


சேலத்தில் தங்கும் விடுதியில் சென்னை போலீஸ்காரர் தற்கொலை முயற்சி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 Jan 2021 4:57 PM IST (Updated: 10 Jan 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் உள்ள தங்கும் விடுதியில் சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கலுங்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (வயது 26). இவர் சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகாத இவர் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் தனது நண்பரை பார்ப்பதற்காக சேலத்துக்கு வந்தார். பின்னர் அவர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கினார்.

இந்த நிலையில் நேற்று காலை தனது நண்பருக்கு போன் செய்து தான் விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தங்கும் விடுதிக்கு வேகமாக சென்றார். அங்கு அறையில் மயங்கி கிடந்த அருண்பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் அருண்பாண்டியன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சேலம் டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தாய் இறந்துவிட்டதால் அருண்பாண்டியனை அவருடைய பாட்டி தான் வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருடைய பாட்டியும் இறந்துவிட்டார்.

அப்போது சென்னையில் வேலை பார்த்த அருண்பாண்டியன் அங்கிருந்து புறப்பட்டு செல்வதற்குள் பாட்டியை உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர். இதனால் மனவேதனையில் இருந்த அருண்பாண்டியன் தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவருடைய தற்கொலை முயற்சிக்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story