சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்


சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2021 11:40 AM GMT (Updated: 10 Jan 2021 11:40 AM GMT)

சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் நீேராடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.

சேலம்,

சேலம் அருகே தாசநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஜருகுமலையில் மழை பெய்தால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறி நிலவாரப்பட்டி வழியாக வந்து தாசநாயக்கன்பட்டி அடுத்த வீரபாண்டி பெரிய ஏரியில் கலக்கும்.

தாசநாயக்கன்பட்டியில் உள்ள நீரோடை சுமார் 10 அடி அகலம் கொண்டது. ஆனால் தற்போது அந்த நீரோடையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 10 அடி அகலம் கொண்ட நீரோடை தற்போது 3 அடியாக குறுகி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஜருகுமலையில் இருந்து வரும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து வரும்போது தாசநாயக்கன்பட்டி, ஏ.டி.சி நகர், டெலிபோன் காலனி ஆகிய பகுதிக்குள் புகுந்துவிடுவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில், தாசநாயக்கன்பட்டி நீரோடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று தேசிய நெடுஞ்சாலை அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பனமரத்துப்பட்டி ஒன்றிய தி.மு.க செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், தாசநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வைதேகி செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர்கள் சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீரோடையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, ‘அரசு நிலம், யானை வந்து செல்லும் வழித்தடங்கள், நீர்நிலை வழித்தடங்கள் ஆகியவை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமித்திருந்தால் உடனே அகற்ற வேண்டும் என சமீபத்தில் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதனை மீறி நீரோடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’. என்றனர்.

Next Story