திருவண்ணாமலையில், கலவரத்தை தடுப்பது குறித்து ஒத்திகை - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் கலவரத்தை தடுப்பது குறித்து ஒத்திகை நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நேற்று காவல் துறை சார்பில் கலவரத்தின் போது அதனை போலீசார் எவ்வாறு தடுப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஒத்திகை நிகழ்ச்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசாரில் சிலர் கலவரக்காரர்களை போன்று செயல்பட்டனர்.
அப்போது அவர்கள் தேங்காய் ஓடுகளை வீசி, கோஷங்கள் எழுப்பினர். முதலில் போலீசார் கலவரக்காரர்களை கயிறு போன்றவற்றை வைத்து தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.
பின்னர் கலவரக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டி அடிப்பது, தடியடி நடத்துவது, கண்ணீர் புகை குண்டு வீசி கலவரகாரர்களை விரட்டுவது, இறுதியாக துப்பாக்கி சூடு நடத்துவது போன்றவை செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரைகள் வழங்கி பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில், போராட்டகாரர்கள் கலவரத்தில் ஈடுபட்டால் என்னென்ன சட்ட விதிகளை பின்பற்றி போலீசார் அவர்களை தடுப்பார்கள் என்று ஒத்திகை நிகழ்ச்சி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உட்கோட்ட பகுதிகளிலும் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
Related Tags :
Next Story