சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு 1 லட்சம் பனைவிதைகளை நடவு செய்ய திட்டம் - கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் அரசு இடத்தில் வளர்ந்து உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் 1 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
சிவகங்கை,
சீமைக்கருவேல மரம் சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடானது. இதனுடைய வேர்கள் பூமிக்குள் வெகு ஆழத்திற்கு ஊடுருவி, பெருமளவு நீரை உறிஞ்சக் கூடியது. பிராண வாயுவை அதிகமாக உறிஞ்சிக் கொண்டு, கரியமில வாயுவை வெளிப்படுத்துகின்றது. இதனால் இந்த மரத்தில் பறவைகள் கூடு கட்டாது, ஆடு, மாடுகள் நிழலுக்குக்கூட ஒதுங்காது.
ஆடு, மாடுகள் சினைப்பிடித்தலை இந்த மரம் தடுக்கின்றது. இதன் அருகில் வேறு செடி, கொடிகள் வளர முடியாது. எனவே இந்த மரம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடான ஆபத்தாக இருந்து வருகின்றது. இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. கலெக்டரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் அரசுக்கு சொந்தமான இடங்களில் நிலத்தடி நீரையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் பனை மரக்கன்றுகளை நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக சிவகங்கையை அடுத்த, முத்துப்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கலந்துகொண்டு பனைவிதைகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசிற்கு சொந்தமான காலியிடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பொழுது அந்த இடத்தில் உடனடியாக மாற்று மரங்கள் நடவு செய்து பராமரிக்க ஊரக வளர்ச்சித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்காக 445 ஊராட்சிகளிலும் ஒவ்வொரு நாற்றாங்கால் பண்ணை அமைத்து சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்த்து அந்தந்தப் பகுதியில் நடவு செய்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவற்றுடன் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பனைவிதைகளும் நட்டு பராமரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக, பனைவிதைகள் கரைப்பகுதிகள் மற்றும் தடுப்பணைகள் அருகாமையில் நடவு செய்து பராமரிக்கும் பொழுது மண் அரிப்புகள் தடுக்கப்படுவதுடன், கரைப்பகுதிகள் பலப்படுத்தப்படும்.
அதன் அடிப்படையில் தற்போது 1 லட்சம் பனைவிதைகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 1,000 பனைவிதைகள் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு வளாகத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் வடிவேல், கோட்டாட்சியர் முத்துக்கழுவன், வட்டார வளர்ச்சி அதிகாரி பழனியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story