வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: திருப்புவனம் படுகை அணை நிரம்பி வழிகிறது - விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் திருப்புவனம் படுகை அணை நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருப்புவனம்,
திருப்புவனம் வைகை ஆற்றில் உயர்மட்ட பாலத்தின் அருகே படுகை அணை கட்டப்பட்டுள்ளது. இந்தப்படுகை அணையின் அருகே அருப்புக்கோட்டை, திருப்புவனம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் படுகை அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும்.இதன் மூலம் இப்பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளுக்கு நீர் ஆதாரம் கிடைத்து வந்தது.
கடந்த ஓராண்டாக வைகை ஆற்றில் தண்ணீர் சரிவர வரவில்லை. இதனால் படுகை அணை வறண்டு பாலைவனம் போல் காணப்பட்டது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து நவம்பர் மாதம் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை, விரகனூர் வழியாக திருப்புவனம் படுகை அணையை கடந்து ராமநாதபுரம் சென்றது.
இதற்கு முந்தைய காலகட்டங்களில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்தால் திருப்புவனம் வர குறைந்தது 5 நாட்கள் ஆகும். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஆற்றுப்பகுதியில் ஈரத்தன்மை காணப்படுவதாலும் வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 2 நாட்களில் திருப்புவனம் படுகை அணையை தாண்டிச் செல்கிறது. தண்ணீர் அதிகமாக சென்றதால் வைகை ஆற்றின் இரு கரைகளில் உள்ள தென்னந்தோப்புகள் விவசாய நிலங்கள் மற்றும் கிணற்று பகுதியில் தண்ணீர் ஊற்றுகள் அதிகரித்தன.
.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மதுரை, சோழவந்தான் பகுதியில் பெய்த பலத்த மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட திருப்புவனம் படுகை அணை நிரம்பி வழிேதாடுகிறது.
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்ணீரை வீணடிக்காமல் விவசாயிகள் கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதுகுறித்து திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் தற்போது தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் நகர்பகுதி, கிரிகை பொட்டல் பகுதியில் பொதுமக்கள் யாரும் ஆற்றை கடந்து செல்ல வேண்டாம் என அறிவிப்பு செய்துள்ளனர். இதேபோல் திருப்புவனம் தாலுகா அலுவலகம் சார்பில் நகர்ப்பகுதி மற்றும் வைகை வடகரை, மடப்புரம், லாடனேந்தல், வன்னிகோட்டை, திருப்பாச்சேத்தி உள்பட பல கிராம பகுதிகளிலும் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story