இரவில் நடந்த பயங்கரம்: மானாமதுரை கோர்ட்டு எதிரே வாலிபர் படுகொலை - நண்பருக்கும் சரமாரி வெட்டு; தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு


இரவில் நடந்த பயங்கரம்: மானாமதுரை கோர்ட்டு எதிரே வாலிபர் படுகொலை - நண்பருக்கும் சரமாரி வெட்டு; தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Jan 2021 9:14 PM IST (Updated: 10 Jan 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

நேற்று இரவில் மானாமதுரை கோர்ட்டு எதிரே வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். அவரது நண்பருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளது. இந்த கோர்ட்டின் எதிரே நேற்று இரவு 9 மணியளவில் 2 வாலிபர்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே இறங்கினர். அங்கு நின்றிருந்த 2 பேரையும் விரட்டி, விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் நிலைகுலைந்து போனார்கள். அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சற்று நேரத்தில் அந்த 4 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களிலேேய அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அரிவாளால் வெட்டுப்பட்ட 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் ெகாண்டு இருந்தார்கள். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

உயிருக்கு போராடிய ஒருவரை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு வாலிபரை மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு அவரும் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

மற்றொருவருக்கு சிவகங்கையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மானாமதுரை புதுத்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் அருண்நாதன் என்கிற மைனர் மணி(வயது 29) என்பது தெரிய வந்தது. அரிவாள் வெட்டு காயம் அடைந்தது அவருடைய நண்பரான மானாமதுரை அருகே உள்ள உடையகுளம் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி மகன் வினோத்கண்ணன்(28) ஆவார்.

இவர்கள் 2 பேர் மீதும் வழக்குகள் உள்ளன. இதனால் முன்விரோதம் காரணமாக அருண்நாதன் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் 4 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மானாமதுரையில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story