இலங்கைக்கு கடத்த தனுஷ்கோடி மணல் திட்டில் பதுக்கிய 750 கிலோ மஞ்சள் - இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்
இலங்கைக்கு கடத்த தனுஷ்கோடி மணல் திட்டில் பதுக்கிய 750 கிலோ மஞ்சளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு ஏதோ பொருட்கள் கடத்த உள்ளதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் கப்பல் ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய கடலோர காவல் படையினர் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 3-வது மணல்திட்டு பகுதியில் ஏராளமான மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர். தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர் கையில் துப்பாக்கியுடன் மணல்திட்டு பகுதி முழுவதும் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அங்கு 15 மூடைகளில் இருந்த 750 கிலோ மஞ்சளை கைப்பற்றினர். மஞ்சள் மூடைகளை ஏற்றி வந்த படகு மற்றும் கடத்தல்காரர்கள் யாரும் அந்த பகுதியில் உள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் யாரும் இல்லாததால் மஞ்சள் மூடைகளை கப்பலில் ஏற்றி மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தனுஷ்கோடி 3-வது மணல் திட்டில் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 750 கிலோ மஞ்சளானது ராமேசுவரம் அல்லது பாம்பன், மண்டபம் ஏதேனும் கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் ஏற்றி கொண்டு சென்று இலங்கையில் இருந்து வரும் கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மஞ்சளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.7½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய- மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story