வாரம் இருமுறை ராமேசுவரத்தில் இருந்து மதுரை, கோவை வழியாக மங்களூருக்கு புதிய ரெயில் - தென்னக ரெயில்வே பரிந்துரை


வாரம் இருமுறை ராமேசுவரத்தில் இருந்து மதுரை, கோவை வழியாக மங்களூருக்கு புதிய ரெயில் - தென்னக ரெயில்வே பரிந்துரை
x
தினத்தந்தி 10 Jan 2021 4:36 PM GMT (Updated: 10 Jan 2021 4:36 PM GMT)

ராமேசுவரத்தில் இருந்து மதுரை, கோவை வழியாக மங்களூருக்கு வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரெயில்வே துறையின் வளர்ச்சி மற்றும் விரிவாக்க பணிகள் குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை மனு கொடுத்திருந்தார். அந்த மனுவுக்கு பொது மேலாளர் ஜான் தாமஸ் பதிலளித்துள்ளார். அதில், ராமேசுவரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்துக்கு தென்னக ரெயில்வே பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, மதுரையில் இருந்து மேலூர், கொட்டாம்பட்டி, மணப்பாறை வழியாக திருச்சியை இணைக்கும் புதிய திட்டம் குறித்து பரிசீலனை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

மதுரை-பெங்களூரு இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க கோரிக்கையை பொறுத்தமட்டில், மதுரையில் ரெயில் பெட்டிகள் பராமரிப்புக்கான கட்டமைப்பை விரிவுபடுத்த வழியில்லாமல் உள்ளது. சேலம்-ஜோலார்பேட்டை பிரிவில் தற்போதுள்ள ரெயில்களின் இயக்கத்துக்கு நேரம் சரியாக உள்ளது.

இதற்கு மேல், அந்த பாதையில் வண்டிகளை இயக்க நேரம் ஒதுக்குவது சாத்தியமில்லை. பெங்களூரு பிரிவில் ஒரு ரெயிலை கூட கூடுதலாக இயக்க முடியாத அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்து விட்டது.

தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு புதிய ரெயிலை இயக்கும் அதிகாரம் ரெயில்வே வாரியத்திடம் உள்ளது. தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் கூடுதலாக ரெயில்களை நிறுத்த இடமில்லை. அத்துடன், வாஞ்சி மணியாச்சி-விருதுநகர் இடையே ஒற்றை ரெயில்பாதை இருப்பதால் புதிய ரெயில்கள் இயக்குவதில் சிரமம் உள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை, பாலக்காடு வழியாக மங்களூரு வரை வாரம் 2 முறை ரெயில்கள் இயக்க ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதுரை-வேளாங்கண்ணி இடையே ரெயில்களை இயக்குவதில் வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை.

மதுரையிலும் ரெயில் பெட்டிகளை நிறுத்த தற்போது இடமில்லாத நிலை உள்ளது. எனவே, தற்போதைக்கு மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரெயில்கள் இயக்குவது சாத்தியமில்லை. காரைக்குடி-திண்டுக்கல் புதிய ரெயில்பாதை திட்டம் நத்தம் வழியாக செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த என்ஜினீயரிங் ஆய்வு பணிகள் முடிந்து கடந்த 2012-ம் ஆண்டு ரெயில்வே வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த திட்டத்தை செயல்படுத்த 105 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,314 கோடி செலவாகும். இதன்மூலம் 10.647 சதவீத உள்வருமான விகிதம் இருப்பதாக சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து மேலூர் வழியாக காரைக்குடி புதிய ரெயில்பாதை திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு 85.7 கி.மீ. தூரத்துக்கு ரூ.649 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த 2014-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.

மதுரை நிலையூரில் ரெயில்வேக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தில் புதிய ரெயில்முனையம் அமைக்கும் திட்டம் இல்லை. சென்னையில் இருந்து மதுரைக்கு வாரம் இருமுறை தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மகால் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரைக்கு முன்னதாக வரும் வகையில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சிறப்புப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை-போடி அகல ரெயில்பாதையில் செக்கானூரணி ரெயில் நிலையத்தில் மட்டும் கிராசிங் வசதி ஏற்படுத்தப்படும். போக்குவரத்து வளர்ச்சியை பொறுத்தே கூடல்நகர் ரெயில் நிலையத்தை 2-வது முனையமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story