ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7½ லட்சத்தை இழந்ததால் விரக்தி: திருப்பூரில் ரெயில் முன் படுத்து தற்கொலை செய்த வாலிபர் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7½ லட்சத்தை இழந்ததால் விரக்தி: திருப்பூரில் ரெயில் முன் படுத்து தற்கொலை செய்த வாலிபர் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2021 10:18 PM IST (Updated: 10 Jan 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்தை இழந்த விரக்தியில் திருப்பூரில் வாலிபர் ரெயில் முன் படுத்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள ஊத்துக்குளி ரோடு முதல் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் கடந்த 5-ந் தேதி காலையில் ரெயிலில் அடிபட்டு தலை துண்டான நிலையில் ஒரு வாலிபரின் உடல் கிடந்தது. இது பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த தகவல் உடனடியாக தெரியவில்லை. தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ரெயிலில் அடிபட்டு அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் இறந்தவரின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை கோவையில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு ரெயில்வே போலீசார் தெரியப்படுத்தினர்.

இந்த நிலையில் திருப்பூரில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் (வயது 29) என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டிலிருந்து மாயமானதாக அவருடைய தாயார் எலிசபெத் ராணி (57) கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

அதன் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து எல்வின் பிரட்ரிக்கின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று காலை திருப்பூர் வந்தனர். பின்னர் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த தனது மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது

அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான விவரம் வருமாறு:-

எல்வின் பிரட்ரிக்கின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் ஆகும். இவரது தந்தை பெயர் சிலுவை அந்தோணி (58). எல்வின் பிரட்ரிக் ஐ.டி.ஐ. படித்தவர். இவர் சென்னையில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலைக்கு சேர்ந்து அங்கு 7 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். நல்ல ஊதியத்தில் பணியாற்றியவர், பின்னர் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பியுள்ளார்.

அதன்பிறகு கடந்த ஒரு வருடமாக கோவையில் தங்கியிருந்து கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்துள்ளார். மேலும், கார் டிரைவராகவும் வேலை செய்து வந்துள்ளார். அதேநேரம் அவர் ஆன்லைன் சூதாட்டத்திலும் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் ஏராளமான பணத்தை ஆன்லைன் சீட்டு விளையாட்டில் இழந்துள்ளார். அத்துடன் தான் சம்பாதித்த பணம் போக உறவினர்கள், நண்பர்களிடம் தொடர்ந்து கடன் பெற்றும் அந்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் கட்டி இழந்து வந்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் இழந்துள்ளது தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் அவருக்கு கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எலிசபெத் ராணி கோவைக்கு வந்து தன் மகனுடன் தங்கியிருந்தார். 3 நாட்கள் ஊரில் தங்கியிருந்து விட்டு நிதானமாக கோவைக்கு வாருங்கள் என்று கூறி எல்வின் பிரட்ரிக் தனது தாயாரை கடந்த 3-ந் தேதி சொந்த ஊருக்கு வழி அனுப்பிவைத்துள்ளார்.

கடன் நெருக்கடி அதிகமானதாலும், சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியிலும் மனமுடைந்து காணப்பட்ட எல்வின் பிரட்ரிக் கடந்த 4-ந் தேதி காலை தனது செல்போன், அடையாள அட்டை, பணம் உள்ளிட்ட அனைத்தையும் தனது அறையிலேயே வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின்னர் கோவையில் இருந்து நடந்தே திருப்பூர் வந்துள்ளதும், அதன்பின்னர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

பிரேத பரிசோதனை முடிந்ததும் எல்வின் பிரட்ரிக்கின் உடல் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலமாக வாலிபரின் உடலுடன் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்த பின்னரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story