நெல்லை தாமிரபரணி வெள்ளத்தில் குறுக்குத்துறை முருகன் கோவில், 100 மின்கம்பங்கள் சேதம்; சீரமைப்பு பணிகள் தீவிரம்


தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில்
x
தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில்
தினத்தந்தி 18 Jan 2021 8:40 PM GMT (Updated: 18 Jan 2021 8:40 PM GMT)

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் மற்றும் 100 மின்கம்பங்கள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தணிந்த வெள்ளம்
வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்ததால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி, உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது

வினாடிக்கு 70 ஆயிரம் கன அடிக்கு அதிகமாக ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால், ஆற்றங்கரைகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து அங்கு வசித்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். தொடர்ந்து மழை அளவு குறைந்து, அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பும் குறைந்ததால், ஆற்றில் வெள்ளம் தணிந்தது.

நேற்று காலையில் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,408 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3,308 கன அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,830 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,165 கன அடியாகவும் இருந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடிக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கோவில் சேதம்
முன்பு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின்போது, நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது வெள்ளம் தணிந்ததால், 
முருகன் கோவிலுக்கு கல்பாலம் வழியாக ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.

அப்போது கோவிலின் மேற்கூரையில் தளக்கற்கள், சுண்ணாம்பு காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்து இருந்தன. மேலும் கோவிலுக்குள் இருந்த சப்பரங்கள் சரிந்து கிடந்தன. கோவிலில் இருந்த பொருட்களும் சுவரின் ஓரத்தில் குவிந்து கிடந்தன. வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட மரக்கிளைகளும் கோவிலைச் சுற்றி குவிந்து கிடந்தன. கோவிலை சூழ்ந்து செல்லும் வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர் கோவிலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

குவிந்த மரக்கிளைகள்
வெள்ளப்பெருக்கின்போது நெல்லை கைலாசபுரம் தாமிபரணி ஆற்றில் இருந்த சுடலைமாடசாமி கோவிலின் இரும்பு தகடாலான மேற்கூரை சரிந்து சேதமடைந்தது. தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, மேல நத்தம் சாஸ்தா கோவில் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட படித்துறையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த விநாயகர் சிலையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சிறிது தூரத்தில் கிடந்தது. சிலை இருந்த இடத்திலும் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளமாக இருந்தது. வெள்ளம் தணிந்ததால், கோவிலில் சேதமடைந்த பகுதியை சீரமைத்து மீண்டும் விநாயகர் சிலையை நிறுவினர்.

இதேபோன்று நெல்லையில் ஆற்றில் உள்ள பல்வேறு கோவில்கள், மண்டபங்களைச் சுற்றிலும் மரக்கிளைகள் குவிந்து கிடந்தன. சில மரங்கள் வேரோடும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு குவிந்து கிடந்தன.

மின்கம்பங்கள் சேதம்
மேலும், தாமிரபரணி ஆற்றங்கரையில் இரவில் மக்கள் குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பங்கள், தெருவிளக்குகளும் வெள்ளத்தில் சேதம் அடைந்தன. ஆற்றங்கரைகளில் இருந்த டிரான்ஸ்பார்மர்களும், மின்சாதன பெட்டிகளும் சேதமடைந்தன. சில மின்கம்பங்கள் ஆற்றங்கரைகளில் சரிந்து கிடந்தன. அவற்றில் உள்ள மின்கம்பிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கிடந்தன.

இதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆற்றங்கரைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கினர். நெல்லை, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பை, வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தன. அவற்றை கணக்கிட்டு சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Next Story