தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய குடிநீர் திட்ட உறை கிணறுகளை அதிகாரி ஆய்வு
தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய கூட்டுக்குடிநீர் திட்ட உறை கிணறுகளை அதிகாரி நேற்று ஆய்வு செய்தார்.
அதிகாரி ஆய்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அணைகளில் நிரம்பி தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குடிநீர் உறைகிணறுகளும் தண்ணீரில் மூழ்கின.
தற்போது வெள்ளம் குறைந்ததால் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூைலக்கரைப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட தலைமையிடத்தில் வெள்ள சேத மீட்பு பணிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆலோசனை கூட்டம்
பின்னர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகியவற்றில் கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. மேலும் சிற்றாறு மற்றும் இதர கால்வாய்கள் வழியாக வந்த தண்ணீரும் இணைந்து தாமிரபரணி ஆற்றில் 70 ஆயிரம் கனஅடிக்கு கூடுதலாக வெள்ளம் சென்றது. இந்த வெள்ளப்பெருக்கால் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள உறைகிணறுகளை நீராதாரமாக கொண்டு செயல்பட்டு வரும் 46 கூட்டு குடிநீர் திட்டங்கள் முழுமையாக பாதிப்படைந்தது. இதனால் 4 மாவட்டங்கள் முழுவதும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படும் குடிநீர் வழங்கும் பணி வழங்கும் பணியும் தடைபட்டது.
விரைவில் குடிநீர் வழங்கப்படும்
தற்போது 20 பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுக்கள் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட சேதத்தை புனரமைப்பு செய்வதற்கு களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
தற்போது 15 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள கூட்டு குடிநீர் திட்டங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு முழு அளவிலான 244 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்.
இவர் அவர் கூறினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை தலைமை பொறியாளர் மணி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story