100 எடியூரப்பாக்கள் வந்தாலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க முடியாது குமாரசாமி பேட்டி


100 எடியூரப்பாக்கள் வந்தாலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க முடியாது குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2021 5:11 AM IST (Updated: 19 Jan 2021 5:11 AM IST)
t-max-icont-min-icon

100 எடியூரப்பாக்கள் வந்தாலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க முடியாது என்று குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எடியூரப்பாவை போல் 100 எடியூரப்பாக்கள் வந்தாலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க முடியாது. கட்சியை வளர்க்க என்னிடம் முதலீடு உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு எடியூரப்பா, அப்பா-மகன்கள் கட்சியை ஒழிப்பதாக கூறினார். அப்போது 3 முதல்-மந்திரிகள் மாற்றப்பட்டனர். தனிப்பட்ட சி.டி.க்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டேன்.

சி.டி.க்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மாட்டேன். நமது மாநிலத்தின் வளங்களை கொள்ளையடிக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவேன். அதற்கான ஆதாரங்களை நான் வெளியிடுவேன். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஜனதா தளம் (எஸ்) கட்சியை பா.ஜனதாவின் இன்னொரு பிரிவு என்று காங்கிரஸ் தலைவர்கள் குறை கூறினர்.

இப்போது அந்த தலைவர்கள் எடியூரப்பா ஏப்ரல் மாதம் மாற்றப்படுவார் என்று கூறியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மூலம் இந்த தகவல் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இன்னொரு பிரிவு காங்கிரசா?. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய புதிய மந்திரி சி.பி.யோகேஷ்வர் ரூ.9 கோடி செலவு செய்துள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.

கூட்டணி அரசை கவிழ்த்தனர் என்பதற்கு இது சாட்சி ஆகும். எனது ஆட்சி காலத்தில் தீவிரமாக செயல்பட்ட வருமான வரி, அமலாக்கத்துறைகள் தற்போது எங்கே போனது?. முழுமையான மந்திரிசபை அமைந்துள்ளது. இனிமேலாவது மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு நிம்மதி இல்லை. மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் எடியூரப்பா ஆட்சி நடத்த வேண்டும்.

கடந்த 2008-ம் ஆண்டு எடியூரப்பா ஆபரேஷன் தாமரை மூலம் 17 எம்.எல்.ஏ.க்களை இழுத்தார். அப்போது அவர் நல்லாட்சியை கொடுத்தாரா?. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டேன் என்று எடியூரப்பா கூறினார். பா.ஜனதாவில் தற்போது அதிருப்தி எழுந்துள்ளது. இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story