30 தொகுதியிலும் வெற்றிபெற்று புதுவையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் ஜெகத்ரட்சகன் எம்.பி. உறுதி
புதுவையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்று ஜெகத்ரட்சகன் எம்.பி. உறுதிபட கூறினார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதற்காக தி.மு.க. கட்சியின் தலைமையும் அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி. புதுச்சேரி மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க. தேர்தல் பணியை தொடங்கியது.
இந்த நிலையில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று காலை மரப்பாலம் சந்திப்பில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி எனது சொந்த மண். அரைக்கால் டவுசர் அணிந்து கொண்டு காலாப்பட்டில் எனது தாய் மண்ணில் ஓடி, ஆடி விளையாடியுள்ளேன். எனக்கு நீங்கள் தந்துள்ள அங்கீகாரம் பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. புதுவையில் எங்கு பார்த்தாலும் கருப்பு சிவப்பு கொடி பறந்தது. இதனை பார்த்து புதுவையே வியந்து போய் உள்ளது. தாய் பிறந்த மண்ணில் நான் மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். தலைவர் கருணாநிதிக்கும் அதிகம் பிடித்த ஊர் புதுச்சேரி தான். 96 வயது வரையிலும் ஓயாது உழைத்த உத்தம தலைவர் கருணாநிதி. அவரது தடம் பார்த்து செல்லும் தொண்டர்கள் நாம். தமிழை செம்மொழி ஆக்கிய பெருமை அவரை சேரும்.
காந்தியடிகள் ஒருமுறை கூறும் போது, எனக்கு பின்னால் என் மொழியில் நேரு பேசுவார் என்றார். அதுபோல கருணாநிதிக்கு பின்னால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அவர் பிறக்கும்போதே இனமொழியுடன் பிறந்தார். அவர் என்னை வாழ்த்தி புதுவைக்கு சென்று வா என ஆணையிட்டுள்ளார். புதுச்சேரிக்கு சென்று தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து வாருங்கள் என்று கூறியுள்ளார். அவரது தூதுவனாக நான் இங்கு வந்துள்ளேன்.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சி செய்த மண் அல்லவா இது. மீண்டும் இங்கு தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். இதனை யாராலும் தடுக்க முடியாது. யாருடன் கூட்டணி வைக்க வேண்டும். யார் முதல்-அமைச்சர் என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். அதனை நாம் முடிவு செய்ய முடியாது.
புதுவை சொர்க்க பூமி. தற்போது இதனை பார்க்கும் போது எனக்கு வயிறு எரிகிறது. இந்த மண்ணின் மைந்தன் நான். இந்த மாநிலம் தான் நமக்கு முக்கியம். ஏன் மாநிலத்திற்கு நன்மைகள் செய்ய முடியாது. புதுவையில் எத்தனை மில்கள் மூடி கிடக்கிறது. இதனால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறது. அந்த மில்களை ஏன் திறக்க முடியாது? இங்குள்ள இளைஞர்களுக்கு ஏன் வேலை வாய்ப்புகளை வழங்க முடியாது.
புதுவை மாநில வளர்ச்சிக்கு இதுவரை என்ன திட்டம் தீட்டியிருக்கிறீர்கள்? புதுவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும், மாநிலம் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எனது எண்ணம். அதற்கான நானே பல திட்டங்கள் வைத்துள்ளேன். எனது தொகுதியில் 14லட்சம் வாக்குகள் உள்ளது. எனக்கு 14 லட்சம் பேரையும் நன்றாக தெரியும். தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நான் செல்லப்பிள்ளையாக உள்ளேன். தேவையற்ற சண்டை போட்டு இந்த மண்ணை வீணாக்கி விட்டார்கள். தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
விவசாயம் பொய்த்து போய் விட்டது. விவசாயத்திற்கு மாற்று என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். புதுவையில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுப்பது என்ன பெரிய விஷயமா? புதுவைக்கு புதிதாக 10 நிறுவனங்களை கொண்டு வந்தால் ஒரே வருடத்தில் 1 லட்சம் பேருக்கு புதிதாக வேலை கொடுத்து விடலாம். ஆட்சியாளர்கள் பெரிய தொழிலதிபர்களை போய் கேளுங்கள். நம் மக்களுக்காக நாம் கேட்கலாமே. மாநில மக்களின் நலனுக்காக பெரிய பெரிய தொழிலதிபர்களின் காலில் போய் விழுவதில் எந்த தவறும் இல்லை.
புதுவையில் அருமையான துறைமுகம் உள்ளது. இதனை நவீனப்படுத்தினால் பலருக்கு வேலை கிடைக்கும். புதுச்சேரிக்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் நல்ல தொடர்பு உள்ளது. விமான நிலையத்தை நவீனப்படுத்தினால் அங்கிருந்து ஏராளமானோர் புதுவைக்கு வந்து செல்வர். உங்கள் வீட்டு பிள்ளை நான். புதுவையை ஒரு புதுமையான, வளமையான பகுதியாக மாற்றப்படும். புதுச்சேரியை உலகில் உள்ளவர்கள் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் மாற்றுவேன். கட்சியினர் கவலைப்படாமல், தைரியமாக இருங்கள். நாளை நமதே, என்று இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
புதுவையில் நேற்று நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்திற்கு வழிகாட்ட, வரலாற்றை மாற்றி எழுத முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி. வந்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 23 ஆண்டுகளாக தி.மு..க ஆட்சியில் இல்லை. இதனால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் யாருக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.
நம்மால் ஆட்சிக்கு வந்தவர்களால் நமக்கு நன்மை ஏதும் இல்லை. மக்களுக்கும் எந்தவித நன்மையும் இல்லை. இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறினோம்.
புதுவையில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைய எதிர்க்கட்சிகள் பயப்படும் மாதிரி ஒருவரை நியமியுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி.யை மாநில பொறுப்பாளராக நியமித்துள்ளார். புதுவை மாநிலத்தில் ஆட்சியாளர்களின் சுயமரியாதையும், தன்மானமும் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியால் அவர்களது கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் பயன் இல்லை.
இந்த அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல், கவர்னரை குறை கூறிக் கொண்டே காலம் கடத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட இதுவரை நிறைவேற்றவில்லை.
புதுவை மாநிலம் எவ்வாறு வளர்ச்சி பெற வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் வடிவமைக்க வேண்டும். புதுவையில் இன்னும் 2 மாதத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக் குமார் பேசியதாவது:-
2021-ம் ஆண்டு மே மாதம் புதுவையில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி நடைபெறும். அப்போது ஜெகத்ரட்சகன் முதல்-அமைச்சராக இருப்பார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதேசி, ஏ.எப்.டி. மில்களை மீண்டும் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட போது அங்கு வந்த அமைச்சர்கள் 2 பேர் எப்படி மில்களை இயக்க முடியும் என கூறினார்கள். மில்களை இயக்க முடியவில்லை என்றால் எதற்கு அமைச்சர்கள். புதுவையில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் நமது நோக்கம். தற்போது உள்ள சூழ்நிலையில் புதுவை அமைப்பாளர்களில் யாராவது ஒருவர் முதல்-அமைச்சராக வரவேண்டும் என நாம் விரும்பினால் அதனை மக்கள் விரும்ப மாட்டார்கள். ஜெகத்ரட்சகன் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர் சாதிக்க பிறந்தவர். கண்டிப்பாக அவர் புதுவை முதல்-அமைச்சராக வருவார். புதுவை மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு தனியாக அவர் திட்டம் தீட்டி வைத்துள்ளார்.
புதுவையில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடப்பதை அறிந்து அரசு சார்பில் இன்று(நேற்று) சட்டசபை கூட்டப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தை கூட்ட வேறு நாளே இல்லையா? ஜெகத்ரட்சகன் புதுவை வரும் செய்தி மறைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சட்டசபை கூட்டப்பட்டுள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க.வின் வரலாறு மாறப்போகிறது. 23 ஆண்டுகள் கழித்து புதுவையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி ஜெகத்ரட்சகன் தலைமையில் மலரப்போகிறது. தி.மு.க.விற்கு மேலும் ஒரு கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. அந்த கிரீடத்தால் புதுவையில் தி.மு.க. பொலிவு பெறுகிறது. கட்சியின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து கட்சி வெற்றி பெற பாடு படுவோம். வருங்காலத்தில் இங்குள்ள 30 தொகுதிகளிலும் தி.மு.க. தனியாக நின்று வெற்றி பெறுவோம். தி.மு.க.வில் இடம் பெறலாமா? வேண்டாமா? என யோசித்தவர்கள் கூட தற்போது தி.மு.க.வில் இணைய தொடங்கி யுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணா திலீபன், அமுதா குமார், பொருளாளர் சண் குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ், துணை அமைப்பாளர் பிரைட் ஏழுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலம் நடத்தினர். முன்னதாக புதுவை வந்த அவருக்கு மாநில எல்லையான கனகசெட்டி குளத்தில் தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து ஊர்வலமாக வந்த அவர் மதியம் 12.30 மணிக்கு பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த வெளி ஜீப்பில் அவர் ஏறிக்கொள்ள ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிளில் தி.மு.க.வினர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை மு.பிரபாகரன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, நெல்லித்தோப்பு சந்திப்பு, இந்திராகாந்தி சிலை, 100 அடி ரோடு, வழியாக சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தை முன்னிட்டு புதுச்சேரியில் முக்கியமான இடங்களில் தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story