கரூரில் புதிய திராவிட கழகம்- கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நல சங்க மாநில மாநாடு 4 அமைச்சர்கள் பங்கேற்பு


கரூரில் புதிய திராவிட கழகம்- கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நல சங்க மாநில மாநாடு 4 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Jan 2021 7:10 AM IST (Updated: 19 Jan 2021 7:10 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நடந்த புதிய திராவிட கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நல சங்கத்தின் 4-வது மாநில மாநாட்டில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கரூர், 

கரூர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு திடலில் நேற்று முன்தினம் புதிய திராவிட கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நல சங்கத்தின் 4-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதற்கு புதிய திராவிட கழக நிறுவன தலைவர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பசுவை பி.சந்தோ‌‌ஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மணிமண்டபம்

மாநாட்டில், தமிழகத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமாக வாழ்ந்து வருகிறோம். வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தின் உட்பிரிவுகளை ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரவேண்டும். கல்வி, பொருளாதாரம், அரசியல், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 20 சதவீதம் உள்ஒதுக்கீடு வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே முதன்முதலில் ஜேடர்பாளையத்தில் தடுப்பணை கட்டி ராஜவாய்க்கால் வெட்டி விவசாயத்தை காத்த மாமன்னருக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க ஆணையிட்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்வது.

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டுப்பெறுவது. மாமன்னர் கொங்காள்வானுக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும். மாமன்னர்வள்ளளல் வல்வில் ஓரிக்கு கொல்லிமலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். நாமக்கல் நகர பேருந்து நிலையம் அருகே முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும். மாமன்னர் கடியநெடு வேட்டுவனுக்கு கொடைக்கானல் மலையின் மீது ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிலை அமைத்து மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டமன்றத்தில் கண்டிப்பாக ஒலிக்கும்

மாநாட்டில், நிறுவன தலைவர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் பேசுகையில், ஓசூர், கிரு‌‌ஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய ஊர்களில் இருந்து இந்த மாநாட்டை குடும்ப விழாவாக நினைத்து வந்துள்ளீர்கள்.

உங்களுக்காக தேவைப்பட்டால் எனது உயிரையும் கொடுப்பேன். நமது கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க.விற்கு நமது வாக்குகளை பதிவு செய்யுங்கள். 2021-ல் நீங்கள் எதிர்ப்பார்க்கின்ற குரல் சட்டமன்றத்தில் கண்டிப்பாக ஒலிக்கும். கொங்கு மண்டலத்தில் எதிர்த்து நிற்கின்ற கட்சி டெபாசிட் இழக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் நாம் புதிய சரித்திரத்தை படைப்போம், என்றார்.

இதில் நகர செயலாளர் அருள், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, மாவட்ட தொண்டரணி தலைவர் தங்கமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் தனு‌‌ஷ் ராஜா, கரூர் ஒன்றிய செயலாளர் சண்முகவேல், கரூர் ஒன்றிய தலைவர் ராஜே‌‌ஷ், நகர இளைஞரணி செயலாளர் தினே‌‌ஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கரூர் மாவட்ட புதிய திராவிட கழகம், கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நல சங்கத்தினர் செய்திருந்தனர்.

Next Story