மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் வேளாண்சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுவை சட்ட சபையில் தீர்மானம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு


மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் வேளாண்சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுவை சட்ட சபையில் தீர்மானம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2021 7:11 AM IST (Updated: 19 Jan 2021 7:11 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும் என்ற 2 அரசினர் தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் புறக்கணித்தன.

புதுச்சேரி, 

கூட்டத்தில் வேளாண் அமைச்சரான கமலக்கண்ணன் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி அரசின் தீர்மானத்தை கொண்டுவந்தார்.

தீர்மானத்தை கொண்டுவந்த அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. இதுதவிர வேளாண் சந்தை மாநில அரசின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால் மின்சாரம், நீர், உரம், இடுபொருட்கள் போன்றவற்றுக்கு மாநில அரசுகள் தற்போது வழங்கி வரும் மானியங்கள் தர இயலாத சூழல் ஏற்படும். மேலும் விவசாயம் கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தின்கீழ் வந்துவிடும்.

இதனால் ஏற்கனவே விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் வாடும் விவசாயிகள் மேலும் ந‌‌ஷ்டமடையும் நிலை ஏற்படும். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தம் உயிரையும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நாட்டின் நலன்காக்க தலைநகரில் குவிந்த விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும், அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை கூறியுள்ளது. விரைவில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பும் நடத்த உள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தினால் ரூ.35 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் சம்பாதிக்க மத்திய அரசு இந்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது. பாராளுமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பாக விவாதிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, இந்த சட்டநகலை நான் ஏற்கனவே கிழித்தெறிந்து உள்ளேன். இப்போதும் இந்த நகலை கிழித்தெறிகிறேன் என்று கூறிவிட்டு தான் கையில் வைத்திருந்த சட்ட நகலை கிழித்தெறிந்தார். இதை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம், தீர்மானம் நிறைவேறியது.

முன்னதாக புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அரசினர் தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவை யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று 1987 முதல் புதுவை சட்டசபையில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்பு புதுவை பட்ஜெட்டில் 60 சதவீதத்துக்கு மேலான நிதியை மத்திய அரசு வழங்கிவந்தது. ஆனால் தற்போது அது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

புதுவைக்கு என தனிக் கணக்கு தொடங்கப்பட்ட பின்பு அது படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 20 சதவீத நிதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுவதுபோல் 41 சதவீத மானியம் கிடைக்கும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது நிர்வாக ரீதியாகவும், நிதி அளவிலும் மிகவும் முக்கியமானதாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே மக்கள் நலத்திட்டங்களையும் புதுச்சேரிக்கான வளர்ச்சி திட்டங்களையும் செவ்வனே நிறைவேற்ற முடியும். கடந்த 4½ ஆண்டுகளாக மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற போராடி வருகிறோம். அதற்கு தேவையான நிதி இருந்தாலும் கோப்பு அனுப்பினால் அவற்றை கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்புகிறார்.

நம்மால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முடியும். இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் ஆதரித்து பேசியிருக்கவேண்டும். ஆனால் இந்த அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்று புறக்கணித்துள்ளனர்.

ரங்கசாமி ஆட்சியில் இருக்கும்போது 2014 முதல் 2016வரை பிரதமராக மோடிதான் இருந்தார். அப்போது ஏன் மாநில அந்தஸ்து பெறவில்லை? அவரது பேச்சு வெறும் கோ‌‌ஷம்தான். இப்போது ஏன் அவர் சட்ட சபைக்கு வரவில்லை? நான் மத்திய மந்திரியாக இருந்தபோது ஏன் மாநில அந்தஸ்து வாங்கித்தரவில்லை என்கிறார்கள் சிலர். அப்போது நாங்கள் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டோம். அப்படி கிடைத்தால் 90 சதவீத நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும்.

மாநில அந்தஸ்து கிடைத்தால் 41 சதவீத நிதி கிடைக்கும். புதுவையில் மாநில அந்தஸ்து தொடர்பாக எதிர்க்கட்சிகள் வெளிவே‌‌ஷம் போடுகின்றன. மாநில அந்தஸ்து இல்லாததால் ஒரு சட்டத்தை நிறைவேற்ற 5 ஆண்டுகள் ஆகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க கோப்பு அனுப்பினால் அதற்கு நமக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது.

மக்கள் நல திட்டங்கள் தொடர்பாக 34 கோப்புகளை கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார். அந்த கோப்புகள் டெல்லியில் தேங்கியுள்ளன. நாம் அதுகுறித்து கேட்டால் அந்த கோப்புகள் எதுவும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல என்று கூறி மத்திய அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர்.

மத்திய அரசானது புதுவை கவர்னருக்கு ரூ.100 கோடியும், முதல்-அமைச்சருக்கு ரூ.50 கோடியும், அமைச்சர்களுக்கு ரூ.10 கோடியும் நிதி அதிகாரம் வழங்கி கோப்பு அனுப்பியது. ஆனால் அதை கவர்னர் வழங்கவில்லை. அவர் மத்திய அரசையும் மதிப்பதில்லை. இப்போது மாநில அந்தஸ்து கேட்கிறோம்.

புதுவையை 15-வது நிதிக் குழுவில் சேர்ப்பதாக அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் கூறினார்கள். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் அதை ஏற்கவில்லை. விரைவில் பிரதமர் மோடி புதுச்சேரி வருவார். அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவோம் என்பார். புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை தடுத்து நிறுத்தியவரே பிரதமர்தான். அவர் புதுவை மாநிலத்தை வஞ்சிக்கிறார்.

முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. கவர்னர் கிரண்பெடி யாரையும் மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகள் இந்த சமயத்தில் விழித்தெழ வேண்டும். எங்கள் அரசோடு ஒத்துழைக்கவேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் புறக்கணித்தன. அதேநேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்திலேயே கூடியிருந்தனர்.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் இரங்கல் குறிப்புகள் வாசிக்கும்போது சபையில் இருந்தனர். பின்னர் மவுன அஞ்சலி செலுத்திய பின் சட்டசபையிலிருந்து வெளியே சென்றுவிட்டனர். தீர்மானங்கள் நிறைவேற்றும்போது அவர்கள் சபையில் இல்லை.

Next Story