சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் பொதுமக்களுக்கு, கலெக்டர் அறிவுரை


சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் பொதுமக்களுக்கு, கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 19 Jan 2021 2:39 AM GMT (Updated: 19 Jan 2021 2:39 AM GMT)

சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி விபத்து இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை உருவாக்கிட வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போக்குவரத்து துறை சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று தொடங்கியது. இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது:-

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 32-வது தேசிய சாலை பாதுகாப்பு 17.02.2021 வரை ஒரு மாதம் கடைபிடிக்கப்படுகிறது.

விபத்துகள் குறைந்தது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை சாலை விபத்து மற்றும் உயிர்சேதம் குறைந்துள்ளது. அதன்படி, 2018-ம் ஆண்டு 1,805 சாலை விபத்துகளில் 410 பேரும், 2019-ம் ஆண்டு 1,621 சாலை விபத்துகளில் 357 பேரும், 2020-ம் ஆண்டு 1,272 சாலை விபத்துகளில் 305 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2019-ஐ விட கடந்த 2020-ம் ஆண்டில் சாலை விபத்துகள் 21.52 சதவீதம் குறைந்துள்ளதுடன், 14.56 சதவீதம் உயிரிழப்புகளும் அதிக அளவில் குறைந்துள்ளது. அதிக சாலை விபத்துகள் இருசக்கர வாகனத்தின் மூலமே நடைபெற்றுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனங்களில் செல்லும் போது செல்போன் பயன்படுத்த கூடாது. வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழிகளை பின்பற்ற வேண்டும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சாலை விதிகளை கடைபிடித்து, உயிரிழப்புகளை தவிர்த்து, உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்கிட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மரக்கன்றுகளை நட்டார்

முன்னதாக கலெக்டர் முன்னிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர்) சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மரக்கன்றுகளை நட்டார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ஈஸ்வரமூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட வாகன டிரைவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story