நாமக்கல்லில் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஒரு காரில் 2 பேர் பட்டா கத்தியுடன் இருப்பதாக நல்லிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஒரு காரில் 2 பேர் பட்டா கத்தியுடன் இருப்பதாக நல்லிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டா கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் நல்லிபாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மூணான்டிபட்டி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 26), மற்றொருவர் திருச்சி மாவட்டம் எடமடைப்பட்டிபுதூரை சேர்ந்த பாதுஷா (32) என்பதும் தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் போலீஸ் நிலைய எல்லையில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் 12 பேர் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தினசரி நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்புக்காக நாங்கள் பட்டா கத்தியுடன் வந்தோம் என பிடிபட்ட இருவரும் போலீசாரிடம் தெரிவித்தனர். இருப்பினும் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story