சேலத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு


சேலத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Jan 2021 3:33 AM GMT (Updated: 19 Jan 2021 3:33 AM GMT)

சேலத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் சேலம் அரசு ஆஸ்பத்திரி, குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கோகுலம் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் கடந்த 8-ந் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி பணியாளர்கள் என பதிவு செய்த 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 400 டோஸ் தடுப்பூசி மருந்து சுகாதாரத்துறை மூலம் வாங்கப்பட்டு குளிர்பதன பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் குமாரசாமிப்பட்டி, தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்தது. இதில் தாய்சேய் நல அலுவலர் சுமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் 16 டாக்டர்கள் உள்பட 206 மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், தனியார் ஆஸ்பத்திரிகளை சேர்ந்த 25 மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 231 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஆணையாளர் ஆய்வு

குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகர நல அலுவலர் டாக்டர் பார்த்திபன் மற்றும் பலர் இந்த முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மேலும், முகாமில் கணினியில் பதிவு செய்யும் வசதி, காத்திருப்போர் அறை, கண்காணிப்பு அறைகளில் செய்யப்பட்டிருந்த வசதிகளையும் ஆய்வு செய்தார்.


Next Story