சேலத்தில், சாலை பாதுகாப்பு விழாவையொட்டி ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


சேலத்தில், சாலை பாதுகாப்பு விழாவையொட்டி ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Jan 2021 3:35 AM GMT (Updated: 19 Jan 2021 3:35 AM GMT)

சேலத்தில் சாலை பாதுகாப்பு விழாவையொட்டி நடந்த ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு விழாவையொட்டி பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 32-வது சாலை பாதுகாப்பு விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதி வரை ஒரு மாதம் நடத்தப்படுகிறது.

இதையொட்டி நேற்று வாகன ஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராஜராஜன், சரவணபவன், ஜெயக்கவுரி, ரகுபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இனிப்பு

ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்களும், சீட்பெல்ட் அணிந்து கொண்டு கார் பயிற்சி ஓட்டுனர்களும் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் திருவள்ளுவர் சிலை வழியாக சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தை சென்றடைந்தது.

முன்னதாக சாலை பாதுகாப்பு விழாவையொட்டி கலெக்டர் அலுவலகம் வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது போக்குவரத்து விதிகள் அடங்கிய துண்டுபிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டன. மேலும் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தினமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story