கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டம் நடத்த அனுமதி- கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு


கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டம் நடத்த அனுமதி- கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 19 Jan 2021 3:36 PM IST (Updated: 19 Jan 2021 3:36 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தேரோட்ட தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுப்பார்கள்.

அதேபோல் மகா தரிசன நாளன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறாது என்றும் மற்ற நிகழ்ச்சிகள் நிபந்தனைகளோடு நடைபெறும் என கடந்த வாரம் ஈரோடு ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தர்கள் வேதனை அடைந்தனர். பின்னர் அ.தி.மு.க.வினர் அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன் தலைமையில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி மற்றும் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோரை நேரில் சந்தித்து சென்னிமலை முருகன் கோவிலில் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இந்தநிலையில் சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டம் நடத்துவது குறித்து நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:-

சென்னிமலை முருகன் கோவிலில் வருகிற 28-ந் தேதி காலை தேர் வடம் பிடிக்கப்பட்டு வழக்கம் போல் மறுநாள் மாலை 5 மணிக்கு நிலை சேர்க்கப்படும். மகா தரிசன தினத்தன்று விடிய, விடிய சாமி ஊர்வலம் நடத்தாமல் இரவு 11 மணிக்கு சாமிகளை கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்படும்.

மண்டப கட்டளை நிகழ்ச்சிகளை 7 நாட்கள் மட்டும் நடத்தி அதில் கட்டளைதாரர்கள் 50 பேருக்கு மட்டும் அனுமதி அளித்தல், வெளியூர்களில் இருந்து காவடி எடுத்து வருபவர்கள் 10 பேருக்கு மேல் கூட்டமாக வரக்கூடாது. காவடி குழுவினர் கோவில் மற்றும் அடிவாரத்தில் தங்க அனுமதி இல்லை. அதேபோல் பக்தர்கள் அன்னதானம் வழங்க கூடாது. தேர் திருவிழாவிற்காக தற்காலிக கடைகள், ராட்டினங்கள் போன்றவை அமைக்க அனுமதி இல்லை. அதேபோல் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை.

தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இந்த ஆண்டு தேர் திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் எதுவும் இயக்கப்பட மாட்டாது. என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, ஆர்.டி.ஓ. சைபுதீன், ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் எம்.அருள்குமார் மற்றும் கோவில் நிர்வாகிகள், மண்டப கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்டம் மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story