பல்லடம் அருகே குடும்பத்தகராறில் கணவர் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த பெண் சாவு


பல்லடம் அருகே குடும்பத்தகராறில் கணவர் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 19 Jan 2021 5:34 PM IST (Updated: 19 Jan 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே குடும்பத்தகராறில் கணவரால் கத்தியால் குத்தப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கவுரிசங்கர்(வயது 36). இவருடைய மனைவி பானுப்பிரியா(30) இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கவுரிசங்கர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. பெற்றோர்கள் சமாதானம் செய்தும், இருவருக்கும் பிரச்சினை தீரவில்லை. இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கவுரிசங்கர்  வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் வயிறு, கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
மனைவியை கோபத்தில் கத்தியால் குத்தி விட்டோமே என மனமுடைந்த கவுரிசங்கர் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவருக்கு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் கணவரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பானுப்பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
குடும்பத்தகராறில் 2  பெண் குழந்தைகளை தவிக்க விட்டு கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் பல்லடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story