வையம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் 16 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்
வையம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் 16 வயது சிறுமி கொடூர தாக்குதலுக்கு ஆளானார். அவரை தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வையம்பட்டி,
வையம்பட்டியை அடுத்த அணியாப்பூர் அருகே 16 வயது சிறுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே, அங்கு கால்நடை மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் ஓடிச்சென்று பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள பாறைக்கு அருகில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அந்த சிறுமி கிடந்தார். மேலும் ஒருவர் சிறுமிக்கு அருகில் இருந்து ஓடிக்கொண்டு இருந்தார்.
உடனே அவர், இதுபற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறவே, அவர்கள் சிறுமியை மீட்டு உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறுமி கிடந்த இடத்தின் அருகே இருந்து ஓட்டம் பிடித்த நபர் அரசு நிலையப்பாளையம் பகுதியில் அமர்ந்திருந்தார். அவரை பொதுமக்கள் பிடித்தனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தவரை அழைத்துச் செல்ல முயன்றனர்.
ஆனால் ஆத்திரமடைந்த மக்கள் சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பொதுமக்கள் ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒருவர் உள்பட இருவரை விசாரணைக்காக மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். சிறுமி ஏன் தாக்கப்பட்டார்? எதற்கு தாக்கினர்? சிறுமி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாரா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story