பிளஸ்-2, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களிடம் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்க தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை,
பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க ஒப்புதல் அளித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்க அரசு அறிவித்து உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் மற்றும் நிதியுதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 539 பள்ளிகள் உள்ளன.
கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பூட்டி கிடந்த பள்ளிகளை தூய்மைப்படுத்தவும், சுத்தமான குடிநீர் வசதி மேற்கொள்ளவும், மாணவர்களுக்கான இருக்கைகள் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யவும், கழிவறை சுத்தம் செய்யயும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் கொண்ட குழுவினர் பள்ளிகள் வாரியாக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து அறிவுரை வழங்கி அவர்களுக்கான கால அட்டவணை தயாரித்து பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 62 ஆயிரத்து 987 மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் ‘மல்டி’ வைட்டமின் மாத்திரைகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் வழங்கினார்.
அப்போது மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ், பள்ளி துணை ஆய்வாளர் குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story